சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட மருந்துகளை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட உத்தரவுக்கு, தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து 'விக்ஸ் ஆக்ஷன் 500' உள்ளிட்ட பிரபலமான மாத்திரைகள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளன.
சில குறிப்பிட்ட கலப்புகளை கொண்ட 340 வகையான மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு தடை விதித்து மத்திய சுகாதாரத் துறை மார்ச் 10 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதனால் வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்களை தயாரித்து விற்பனை செய்யும் 'பிராக்டர் அன்ட் கேம்பிள்' நிறுவனத்தின் தயாரிப்பான 'விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா' மற்றும் மருந்து நிறுவனமான 'அபோட்' தயாரித்து விற்பனை செய்த 'பென்சிடிலின்' உள்ளிட்ட பல மருந்துகள் விற்பனை செய்வதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து சில நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை நிறுத்திவைப்பதாக அறிவித்தன.
மேலும், மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்த்து பல நிறுவனங்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசின் உத்தரவுக்கு மார்ச் 21 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது.
நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, 'விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா' மாத்திரைகள் தயாரிப்பு தொடரும் என 'பிராக்டர் அன்ட் கேம்பிள்' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதுபோல 'அபோட்' நிறுவனமும் 'பென்சிடிலின்' தயாரிப்பை தொடரும் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் தடையைத் தொடர்ந்து தான் தயாரித்து வந்த 'கோரக்ஸ்' இருமல் மருந்து விற்பனையை நிறுத்துவதாக 'பிஃப்ஷர்' நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தில்லி நீதிமன்றம் உத்தரவுக்குப் பின்னர் மருந்தை தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்க அந்நிறுவனம் மறுத்துவிட்டது.
No comments:
Post a Comment