தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வின் போது காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6550 பள்ளிகளைச் சேர்ந்த 8,39,697 மாணவ, மாணவிகள் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இவர்கள் தவிர 42,347 பேர் தனித்தேர்வுகள் எழுத உள்ளனர். இதனால் இந்த ஆண்டு மொத்தமாக 8,82,044 பேர் தேர்வு எழுத உள்ளனர். 2421 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுடன் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள ரேத்வு மையங்களில் 106 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த ஆண்டு முதன்முறையாக ஹால் டிக்கெட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. காப்பி அடித்தல் போன்ற தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க சுமார் 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள. மேலும், மாணவர்களும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வு மையங்களுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல அரசு தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.
காப்பி அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் இத்தகைய ஒழுங்கீன செயல்களிலுக்கு துணை புரியும் பள்ளிகளின் தேர்வு உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment