பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிந்திக்கும் திறன் கொண்ட வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், மனப்பாட முறையில் மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்திருந்த தனியார் பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில் இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதிலிருந்து, பிளஸ் 2 வகுப்பில் எடுக்கும் மதிப்பெண், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.
இதனால், மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு, பிளஸ் 2 பாடத்தையே நடத்தி, மனப்பாடம் செய்ய வைத்து தேர்வெழுத வைக்கும் வழிமுறையை, பல தனியார் பள்ளிகள் பின்பற்றி வருகின்றன.சராசரியாக படிக்கும் மாணவர்களை, அவர்கள் பலவீனமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து பயிற்சியெடுக்க வைத்து மதிப்பெண் பெற வைத்தன.
இதனால், 100 சதவித தேர்ச்சி, அதிக கட் ஆப், மாவட்ட அளவிலான ரேங்க் என பேனர் வைத்து, பள்ளியின் கட்டணத்தையும் பல மடங்கு அதிகரித்து வந்தன.நடப்பு கல்வியாண்டிற்கான தேர்வு, மனப்பாடம் செய்யும் வழிமுறைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நடந்த வேதியியல், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் வழக்கமான கேள்விகள் இல்லாமல் புதிய வகை வினாக்களும், சுயமாக சிந்தித்து பதில் எழுதக் கூடிய வினாக்களும் அதிகமாக இடம்பெற்றன. இதனால், மனப்பாடக் கல்வி மூலம் சென்டம் வாங்கும்
மாணவர்களின் எண்ணிக்கை மிக அரிதாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மனப்பாட முறையில் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இம்மாணவர்களிடம் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்பதால் தனியார் பள்ளிகளும் தவிக்கின்றன. இதை சமாளிக்க, சலுகை மதிப்பெண்கள் தர வேண்டும்; மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மாணவர்களுக்கு மனப்பாட முறையில் பயிற்சியளித்த பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், இந்த முறை பாதிக்கப்படலாம். இதனால் அட்மிஷன் குறைந்து, நற்பெயர் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட, தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன.இதேபோல், இனி வரும் தேர்வுகளும் இருக்கும் பட்சத்தில், தனியார் பள்ளிகள் மனப்பாட முறையில் பாடம் நடத்துவதை கைவிட வேண்டியிருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment