நாளை மறுநாள் துவங்க உள்ள, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் துவங்குகிறது. சேலம் மாவட்டத்தில், 286 அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த, 17 ஆயிரத்து, 542 மாணவர்களும், 18 ஆயிரத்து, 697 மாணவியரும், தனித்தேர்வராக, 1, 772 பேரும் சேர்த்து மொத்தம், 38 ஆயிரத்து, 325 பேர் தேர்வெழுதுகின்றனர்.
இவர்களுக்காக, 99 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்களுக்காக, மேட்டூர் அணை எம்.ஏ.எம்., மேல்நிலைப்பள்ளி, பூலாம்பட்டி எஸ்.கே.டி., மேல்நிலைப்பள்ளி, மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி, வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் குளூனி மெட்ரிக் பள்ளி என, ஆறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
11 கட்டுக்காப்பு மையங்கள்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள், சேலம் மாவட்டத்தில், 11 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுக்காப்பு மையங்களில் இரட்டை பூட்டு மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாளன்று, தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது எனவும், மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்காக, 120 ஆசிரியர்களை கொண்ட, 40 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.
கூடுதல் கண்காணிப்பில் 14 மையங்கள்: வெளியாட்களின் நடமாட்டம் இருக்கும் என்பதால், தேர்வு முறையாகவும், முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும், 14 மையங்கள், கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றில், தீவிர கண்காணிப்புக்காக, கூடுதல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொபைல்போனுக்கு தடை
தேர்வு மையங்களுக்குள் எக்காரணம் கொண்டும், மொபைல்போன் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி கொண்டு வரும் பட்சத்தில், தடுத்து நிறுத்தப்படும் போன்களுக்கு பள்ளி நிர்வாகம் எவ்வித பொறுப்பும் ஏற்காது எனவும் இதனால், மாணவர்கள் மொபைல்போன் கொண்டுவருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரியாணிக்கு தடை
தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், கண்காணிப்புக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரியாணி மற்றும் இதர கவனிப்பு செய்யப்படுவதாகவும், அதனால் முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனால், சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் உணவு உள்ளிட்ட எவ்வித சலுகைகளையும் பெறக்கூடாது. மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment