“அரசு ஊழியர்களை நவீன பிச்சைக் காரர்களாக மாற்றிய, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்பவர் களுக்கே வரும் தேர்தலில் எங்கள் வாக்கு” என்று அதிரடி முடிவில் இறங்கியுள்ளனர் அரசு ஊழியர்கள். ‘பங்களிப்புடன் கூடிய புதிய பென்சன் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்தது. 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு ஊழியர்களாகச் சேரும் அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டப்படிதான் பென்சன் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
‘‘புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி அரசு ஊழியர்களின் அடிப் படைச் சம்பளம், தர ஊதியம் மற்றும் அதற்கு இணையான அகவிலைப்படி ஆகியவற்றின் கூட்டுத் தொகையில் மாதம்தோறும் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகைக்கு இணையாக அரசு தனது பங்கைச் செலுத்தும். இவ்வாறு சேரும் தொகையில் 60 சதவிகிதம், ஊழியர் ஓய்வுபெறும்போது கொடுக்கப் படும். மீதமுள்ள 40 சதவிகிதத் தொகை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ஓய்வூதியமாக அளிக்கப்படும்” என்று அறிவித் தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என சுமார் நான்கு லட்சம்பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர்.
இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி, ஊழியர்களின் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவர்களின் ஓய்வுக்காலத்தில் திருப்பித் தர டெல்லியில் ‘ஓய்வூதியத் தொகை வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்’ செயல்பட்டு வருகிறது.
ஓய்வுபெற்ற பிறகும் பலன் அளிக்காத புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பிரடெரிக் ஏங்கெல்ஸிடம் பேசினோம். “புதிய ஓய்வூதியத் திட்டம் வந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், ஓர் அரசு ஊழியர்கூட பயன்பெறவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்றவர்களும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை.
ஊழியர்களிடம் இருந்து ஏழாயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டிருக்கிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை, அரசின் பங்குத்தொகை இரண்டும் பி.எஃப்.ஆர்.டி.ஏ-வுக்குச் செலுத்தப் படவில்லை. அந்தத் தொகை என்ன ஆனது என்பதுதான் எங்கள் கேள்வி?
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த பலன்கள் இந்தத் திட்டத்தில் இல்லை. குடும்ப பென்சன், பணிக்கொடை எதுவும் இந்தத் திட்டத்தில் கிடையாது. எங்களிடம் பிடித்தம் செய்த தொகையை மட்டுமாவதுத் திருப்பித்தரலாம். அதையும் இந்த அரசு தர மறுக்கிறது. தமிழக அரசு இந்தத் தொகையை வைப்புநிதியாக வைத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதனால் எங்களுக்கு என்ன பயன்? ஓய்வுபெறும் ஊழியர்கள் வெறும் கையோடு போகும் நிலை உள்ளது.
ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியாற்றிய நாய்கள், குதிரைகள்கூட ஓய்வுபெற்றபின், அவற்றின் பராமரிப்புக்குப் பணம் ஒதுக்கும் அரசு, எங்களை மட்டும் அலட்சியம் செய்வது ஏன்?” என்றார்.
மத்திய அரசு ஊழியர்களின் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியனிடம் பேசினோம். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஆனால், ஊழியர்களின் பணம்கூட ஒழுங்காக ஆணையத்தில் செலுத்தப் படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்குக் குடும்ப ஓய்வூதியம் உள்ளது. ஆனால், மாநில அரசில் அது இல்லை. ஊழியர்களின் பணத்தைவைத்து பங்குச் சந்தையை வளர்க்கத்தான் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துகின்றனர். ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் எந்தப் பணமும் கிடைக்காமல் நவீன பிச்சைக்காரர்களாக மாறும் நிலை உள்ளது.
2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் இதே அ.தி.மு.க உறுப்பினர்கள், இடதுசாரி உறுப்பினர்களோடு இணைந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அரசு ஊழியர்களிடத்தில் மாறுபாடான நிலையைக் கடைப்பிடிக்கின்றனர். வரும் தேர்தலில் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுவோம் என்று உறுதியாகக் கூறும் கட்சிக்குத்தான் நாங்கள் வாக்களிப்போம்” என்றார்.
No comments:
Post a Comment