தமிழக அரசை கண்டித்து வருகிற 10ம் தேதி முதல் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 2 நாட்கள் சத்துணவு, அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது. தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்கள், 73 ஆயிரம் அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சுமார் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலின் போது இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக சத்துணவு, அங்கன்வாடி மைய ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்து பல முறை மனுவும் அளித்தனர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை. அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு இணை கன்வீனர் மு.வரதராஜன் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். வருகிற 10, 11ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களை மூடி தாலுகா அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 12ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும். தொடர் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து அரசு அழைத்து பேசி தீர்வு காணா விட்டால் அடுத்தகட்டமாக அனைத்து சங்கங்களும் ஒன்று கூடி ஒரு முடிவு அறிவிக்கப்படும்.
அதாவது சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றியவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள். பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்கள், கிராம கடைநிலை ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர், பம்பு ஆப்பரேட்டர், டேங்க் ஆப்பரேட்டர், கிராமப்புற நூலகர், பால் வினியோகம் செய்யும் பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரையும் ஒன்றினைத்து மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். 234 தொகுதியிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment