குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஆனால் பிற குழந்தைகள் போல நம் குழந்தையும் இல்லையே என ஏங்குவது தான், அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். குழந்தைகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அதற்கு பிடித்ததாகதான் இருக்கும். ஆனால், நமக்கு பிடிக்காமல் போகலாம். எனவே இவர்களின் வளர்ப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
எந்த எழுது பொருட்களும் குழந்தைகளின் கையில் கிடைத்தால், பார்க்கும் இடங்களில் எல்லாம் கிறுக்கி வைப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது என்பதை அறிந்து ஊக்கப்படுத்த வேண்டும். பாட்டு, நடனம், நடிப்பு, இசை, விளையாட்டு, பேச்சு, ஆராய்ச்சி இதில் எந்த துறையில் ஆர்வம் உள்ளது என குழந்தைகளின் செயல்பாடுகளை வைத்தே கண்டு பிடிக்கலாம்.
பக்கத்து வீட்டு குழந்தை நன்றாக பாடினால், அதை போல நம் குழந்தையையும் பாட வைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது. குழந்தை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் போது பாராட்டுங்கள், தோல்வியடையும் போது தட்டிக் கொடுத்து, 'அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய்' என்று கூறுங்கள்.
நீங்கள் எந்த வகை இன்று பலரும் கூறும் வாசகமான நீங்கள் எவ்வளவு புத்திசாலி என்பது முக்கியமல்ல. மாறாக எப்படி நீங்கள் புத்திசாலியாக இருக்கிறீர்கள் என்பது முக்கியம். எல்லோரும் எல்லா விஷயங்களிலும் புத்திசாலிகளாக இருக்க வேண்டியதில்லை என்ற வாதத்தை முன் வைப்பதுடன், அறிவாற்றலையும் பல வகையாக பிரித்து அறிவித்தார் டாக்டர் ஹோவர்டு கார்டனர்.
புத்திசாலித்தனத்தை அளவிட, இன்று வரை பலராலும் அறியப்பட்ட முறை 'ஐக்யூ டெஸ்ட்'. விதமான அறிவு வகைகளில் ஒன்றிரண்டு அறிவை மட்டுமே சோதிக்கும். இம்முறையால் உண்மையில் ஒருவரை முழுமையாக மதிப்பிட முடியாது. டாக்டர் ஹோவர்டு கார்டனர், மனிதர்களின் தனித் தன்மைகளை ஆராய்ந்து, அறிவாற்றலை 8 பிரிவுகளாக பிரித்து அறிவித்தார்.
காரண மற்றும் கணித அறிவு
காரணகாரியம், கணிதம் தொடர்பான மாணவன், அறிவியல் விஞ்ஞானி போல பல ஆய்வுகளை நடத்திப் பார்ப்பதிலும் தன் கருத்துக்களை சரிபார்ப்பதிலும், புதிய முறைகளைக் கண்டறிவதிலும் புகழ் பெற்றிருப்பதுடன் கணிதத்திலும் சிறந்து விளங்குவான். எதையும் ஆழமாக யோசிப்பது இவர்களது பழக்கம். ராமானுஜம், சர்.சி.வி.ராமன், செஸ் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்கள் இவ்வகையை சேர்ந்தவர்கள்.
மொழி அறிவு
மொழியை பயன்படுத்துவதில் ஆற்றல் மிக்கவர்கள் பேச்சாளர், எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். மொழித்திறன் உள்ளவர்கள் குறுக்கு எழுத்துப் போட்டி, கவிதை எழுதுவதில் வல்லவர்களாக திகழ் கிறார்கள். புதிய மொழிகளையும், வார்த்தைகளையம் கற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வமுள்ளவர்களாகவும், இலக்கியவாதிகளாகவும் இருந்தால் நீங்கள் மொழி அறிவுலகில் ஜீனியஸ். அறிஞர் அண்ணாதுரை, கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுஜாதா போன்றவர்கள் இதற்கு உதாரணம்.
தன்னை அறியும் அறிவு
தனக்குள்ளேயே தொடர்பு கொள்ளும் ஆற்றல் வாய்க்கப் பெற்ற மாணவன், உள்ளுணர்வு உள்ளவனாகவும், சுயமாக தன்னை ஊக்குவிக்கும் தன்மையுள்ளவனாகவும் திகழ்வான். இவன் வகுப்பின் முன் தன் படைப்புகளைச் சிறப்பாகப் படைப்பதில் ஆர்வம் காட்டுவான்.
தொடர்புத் திறன் அறிவு
மக்கள் தொடர்புத் திறன், கலந்துரையாடும் பண்பு கொண்ட மாணவன் சிறந்த தலைமை பண்பு கொண்டவனாக இருப்பான். அவன் பிரச்னைகளை தீர்ப்பதில் வல்லவனாக இருப்பான். மற்றவர்களின் திறன் அறிந்து பேசி, பழகக் கூடியவர்களாக இருப்பான்.
உடலியல் அறிவு
உடல் மற்றும் சைகை மொழிகளில் திறமையுள்ள மாணவன், ஒரு விஷயத்தை பலருக்கும் புரிய வைப்பவனாக திகழ்வான். உடலை சிறப்பாக கையாள தெரிந்தவர்கள் விளையாட்டு, யோகா, உடற்பயிற்சியாளர்கள், டாக்டர்கள், நடன கலைஞர்களாக இருப்பார்கள்.
கற்பனை அறிவு
முப்பரிமாண சிந்தனை கொண்டவர்கள். அதாவது மாறுபட்டு சிந்திக்கும் திறமையுள்ளவர்கள் எந்த விஷயத்திலும் புதுமையை புகுத்தி தங்களை தனித் தன்மையுடன் காட்டிக் கொள்வர்.
இசை அறிவு
இசை மற்றும் நுண்கலையுடன் தொடர்புடைய மாணவர்கள் பாட்டுப் பாடுதல், இசைக் கருவிகளை இசைத்தலில் ஈடுபாடு காட்டுவர். இவர்கள் இசையின் பின்னணியில் பாடம் நடைபெறுவதை விரும்புவார்கள்.
இயற்கை அறிவு
காடுகள், விலங்குகள் என இயற்கையை ஆராய்வது, பாதுகாப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்கள் இத்துறை மேதைகளுக்கு உதாரணமாக சொல்லலாம். 'மேற்கண்ட எந்த திறன் உங்களுக்கு இருந்தாலும் அதில் உயர்நிலையை நீங்கள் அடைய முடியும். அப்படி அடைந்தால் நீங்களும் ஜீனியஸ்தான். பல துறை நுண்ணறிவுகளைப் பயன்படுத்துவதால் முழு மனிதனாக உயரலாம்' என ஹோவர்ட் கார்ட்னர் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கிறார்.
பெற்றோர்களுக்கு ஒரு தேர்வு
தேர்வில் உங்கள் மகன், மகள் பெறும் மதிப்பெண்களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல.
அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பொதுத்தேர்வை எதிர் கொண்டுள்ள ஒவ்வொரு வீடும்
பரபரப்புக்களமாக மாறி
உள்ளது. தேர்வை சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண்டிருக்கும். பெற்றோர், பள்ளி நிர்வாகம், சமூகம், குழந்தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து கொண்ட பெற்றோரால் மட்டுமே மேற்கொண்ட மனஅழுத்தத்தை மாற்ற முடியும். பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள், முதல் மதிப்பெண் பெற வேண்டும். டாக்டராக, பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம். ஆனால், ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் கிடைக்கும் என்ற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந்தைக்கு வேறு ஏதோ ஒன்றில் அபரிமிதமான தனித் திறமை இருக்கும்.
குழந்தையின் திறமைகளை கண்டறிவது தான் பெற்றோரின் சாமர்த்தியம். அந்த தனித்திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய, பெற்றோர் உதவ வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்காலத்தில், அந்த குழந்தை அதற்கு பிடித்தமான துறையில் சாதனையாளராக சாதிக்கும்.
- டாக்டர் ரத்தினசுவாமி
திறன், ஆளுமை ஆலோசகர்,
கோவை
95977 70205
No comments:
Post a Comment