தமிழ் வளர்க்கும் அயல்நாட்டவர் களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர், 'ஷாவோ ஜியாங்' என்ற கலைமகள், 38. அவர், சீன வானொலியின் தமிழ் சேவைப்பிரிவின் தலைவர். அவர், தற்போது, இந்தியாவிற்கு வந்து, இந்திய பண்பாடு குறித்து ஆய்ந்து வருகிறார்.அவர், நேற்று, சென்னை பல்கலையின் தமிழ் இலக்கியத் துறையில் ஒரு சொற்பொழிவுக்காக வந்திருந்தார். அப்போது நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
'ஷாவோ ஜியாங்' - -கலைமகள் ஆனது எப்படி?
இருபதாண்டுகளுக்கு முன், இடைநிலைப் பள்ளி முடித்ததும், சீன கம்யூனிகேஷன் பல்கலையில், தமிழ் மொழி வகுப்பு துவங்க உள்ள செய்தி அறிந்தேன். அப்போது, தமிழும், சீன மொழியை போல, ஒரு செம்மொழி என்பது மட்டுமே தெரியும். பின், பேராசிரியர் பீ லுாசாவின் மூலம், தமிழின் தொன்மையையும், சிறப்புகளையும் அறிந்தேன். ஏற்கனவே, இந்திய பண்பாடு குறித்து கொஞ்சம் அறிந்திருந்ததால், தமிழ் மீது மதிப்பும் ஆர்வமும் வந்தது. அந்த பல்கலையில், மொத்தம் ஐந்து மாணவர்கள் மட்டுமே தமிழ் பிரிவில் சேர்ந்தோம்.சித்திர எழுத்துக்களை கொண்ட சீன மொழி போல, துவக்கத்தில், தமிழ் கற்பது அவ்வளவு எளிதாக இல்லை. இருந்தாலும், அதன் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.நான்காண்டு கால படிப்பில், தமிழின் எளிய சொற்களும்,பாரதியார் உள்ளிட்ட கவிஞர்களின் சிறுசிறு கவிதைகளும் இடம்பெற்றிருந்தன. தமிழைக் கற்கக் கற்க எனக்கு ஆர்வம் அதிகரித்தது.என் ஆசிரியர், சீன வானொலி தமிழ் சேவை பிரிவில் அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். அதனால், படிப்பு முடித்த உடன், நானும், அங்கு அறிவிப்பாளராக
சேர்ந்தேன். பலருக்கு அதுஆச்சரியமாக இருந்தது.அப்போது தான், எனக்கு மிகவும் பிடித்த தமிழில், என் பெயரை கலைமகள் என மாற்றிக்கொண்டேன். என் நேயர்களும், என்னை கலைமகள் என,அழைப்பதிலேயே மகிழ்ச்சி அடைந்தனர். இது தான், எனக்கும், தமிழுக்குமான தொடர்பும், பெயர் மாற்றத்தின் பின்புலமும்.
சீன வானொலியின், தமிழ் சேவை பற்றியும், உங்களின் நேயர்களை பற்றியும்
சொல்லுங்களேன்?
கடந்த, 1941ல் துவக்கப்பட்ட சீன வானொலியில் தற்போது, 65 மொழிகளில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. அதில், தமிழ் ஒலிபரப்பு, தினமும் அரைமணி நேரம் என்ற அளவில், 1963ல் துவக்கப்பட்டது.அது தற்போது, 4 மணிநேரமாக அதிகரித்துள்ளது. 2001 முதல், தமிழ் இணையதளம், அலைபேசி இணையம், செயலி, முகநுால் பக்கம் ஆகியவற்றையும், தமிழ் சேவை பிரிவு துவக்கி, நல்ல சேவை ஆற்றுகிறது.எங்கள் நேயர்களில், 25 ஆயிரம் பேருக்கு மேல், தமிழகத்திலும், அமெரிக்கா, கனடா, மலேஷியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறுநாடுகளிலும் உள்ளனர்.நாங்கள், எங்களின் ஒலிபரப்பைஒரு பணியாக நினைப்பதில்லை. மாறாக, தமிழர்கள், சீனர்களின் உறவுப்பாலமாகவே கருதுகிறோம்.
அதனால் தான், ஒலிபரப்பாகும், 65 மொழிகளில் இல்லாதஅளவுக்கு, ஆண்டுக்கு, 5லட்சத்திற்கும் அதிகமான தமிழ் நேயர்கள் கடிதத் தொடர்பில்உள்ளனர். அது, எங்களுக்குமிகப்பெருமையான விஷயம்.ஒன்று தெரியுமா... எங்கள் தமிழ் பிரிவில் உள்ள, 18 பணியாளர்களில், மூன்று தமிழர்களை தவிர, மற்றவர்கள் சீனர்கள். உங்கள் நாளேடுகள், ஒலி, ஒளி ஊடகங்களில், ஆங்கில கலப்பு மிகுதியாக உள்ளது போல், எங்கள் ஒலிபரப்பில் இருக்காது.நாங்கள், ஒலிபரப்பில், துாய தமிழை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடனும், சிறப்பு கவனத்துடனும் செயல்பட்டு வருகிறோம்.
உங்கள் தமிழ் இணையதளம், செயலி, முகநுால்களின் வழியாக, என்னென்ன விஷயங்களை முன்னெடுக்கிறீர்கள்?
இணையதளத்தில், பீஜிங், ஷாங்காய், குவாங்துங், யுன்னான் உள்ளிட்ட சீன மாநகரங்களில் வாழும் ஊழியர்கள், பாரம்பரிய மருத்துவ மாணவர்கள், தொழில் நிறுவனர்கள் உள்ளிட்டோரின் நேர்காணலுடன், 'சீனாவில் வாழும் தமிழர்கள்' என்ற பகுதியில், ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.மேலும், தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், தமிழ் விருந்தினர்களையும் நேர்காணல் செய்கிறோம்.கடந்த, 2013ல் உருவாக்கப்பட்டஅலைபேசி இணையத்தில், நேயர்களின் விமர்சன பகுதி இடம்பெறும். செயலியின் மூலம், பல்வேறு தமிழ் சேவைகளை செய்து வருகிறோம்.
கடந்த 15 ஆண்டு கால வானொலி தமிழ் சேவையில், நீங்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்ளும் தனிப்பட்ட செயல்கள் ஏதேனும் உண்டா?
நான், துவக்கத்தில் தமிழ் கற்க சிரமப்பட்டேன். சீன மொழிக்கு இணையான தமிழ் சொற்களை அறிய, பல்வேறு அகராதிகளை தேடி அலைய வேண்டி இருந்தது. அதனால், நானும், எங்கள் தமிழ் பிரிவு பணியாளர்களும் இணைந்து, 2013ம் ஆண்டு, 23,000 கலைச்சொற்களை கொண்ட, புதிய அகராதியை உருவாக்கினோம்.சீனாவிற்கு சுற்றுலா வரும் தமிழர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், 'சீனாவில் இன்ப உலா' என்ற, சுற்றுலா வழிகாட்டி நுாலை வெளியிட்டுள்ளேன். எங்களின் வானொலி நிகழ்ச்சிகளை் குறித்தவற்றை தொகுத்து, 'சீன தமிழொலி' என்னும், காலாண்டிதழையும் வெளியிட்டு வருகிறேன்.
சீனர் - தமிழர் பண்பாடுகளுக்கு இடையே ஏதேனும் ஒற்றுமை உள்ளதா?
உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் போகி பண்டிகை வரப்போகிறது. ஆம், எங்களின் 'சுஞ்சியா' என்னும் புத்தாண்டை, உங்களை போலவே வசந்த விழாவாக கொண்டாடுகிறோம். அந்த விழா மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாள், பழையவற்றை அகற்றுவோம். அன்றிரவு முழுதும் துாங்காமல், புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சமையல் செய்வதற்கான வேலைகளில் இறங்குவோம்.இந்த பண்டிகைக்கு, வெளியூர்களில் உள்ள அனைவரும் சொந்த ஊருக்கு வந்து விடுவர். மறுநாள், பாரம்பரிய உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து, குடும்பத்துடன் உண்டு, பேசி மகிழ்வோம்.மறுநாள், தெருக்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை, வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்து, அனைவருக்கும் வாழ்த்து சொல்வோம். அனைவரும் ஒன்று கூடி, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கேளிக்கைகளுடன் சந்தோஷமாக இருப்போம். இது, தமிழகத்தின் போகி, பொங்கல், காணும் பொங்கலை நினைவூட்டக்கூடியது தானே!
சென்னையில் உங்களை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?
சென்னையில், கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அடிக்கடி செல்வேன். கோவில் பிரகாரத்தில் நிலவும் அமைதி, கோபுரங்களில் வீற்றிருக்கும் வண்ண வண்ண, விதவிதமான சிலைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தென்னிந்திய உணவுகளும் எனக்கு விருப்பம் தான்.
கனவு திட்டங்கள் ஏதாவதும் உண்டா?
நிறைய உண்டு. தமிழில் நிறைய வளமான கவிதைகளும் இலக்கியங்களும் உள்ளன. அவற்றை படிப்படியாக, நேரடியாக, தமிழில் இருந்து சீனத்துக்கு மொழிபெயர்க்க வேண்டும். கம்பராமாயணம் கூட, என் கனவுத்திட்டத்தில் உள்ளது.
நீங்கள், தமிழர்களுக்கு சொல்ல நினைப்பது?
நான், கடந்த சில நாட்களாக, சென்னையில் செயல்படும் பல்வேறு பண்பலை அறிவிப்பாளர்களையும், தொலைக்காட்சி அறிவிப்பாளர்களையும் சந்தித்து, தமிழில் உரையாடிய போது, பலருக்கு பல தமிழ் வார்த்தைகளே தெரியவில்லை. அவர்கள், மிகுதியாக ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர். நான் பேசுவது, இலங்கை தமிழ் போல் உள்ளதாகவும், துாய தமிழில் பேசினால், இங்குள்ளோருக்கு புரியாது என்றும் சொன்னார்கள்.பிற மொழி கலப்பால், தமிழ் குழந்தைகளுக்கு, தமிழ் மொழி பற்றிய குழப்பம் அதிகமாகும். அது, ஒரு மொழியை அழிக்கும் செயல்.சீனத்தில் செயல்படும் அரசு ஊடகங்களில், பிற மொழி கலக்காத சீனச் சொற்களை தான் பயன்படுத்துவோம். அது தான் எங்கள் செம்மொழிக்கு மரியாதை. அதைத் தான் அரசும் விரும்பும். ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழர்களே! செம்மொழி தமிழை தமிழகத்தில் நிலைநிறுத்துங்கள். அது உங்கள் கடமை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment