எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு தொடர்பாக, 2015 பிப்ரவரியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிவிப்பாணை வெளியிட்டது. ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வில் பங்கேற்ற இவர்களுக்கு, உடல் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இத்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை, தங்களுக்கும் வழங்கக் கோரி, ஏற்கனவே போலீஸ் துறையில் பணியாற்றி வரும் அருள் உட்பட, நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுக்களில், 'தமிழில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது; அந்த முன்னுரிமையை எங்களுக்கும் வழங்க வேண்டும்' என, கோரியிருந்தனர்.
மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய முதல் அமர்வு, 'மனுதாரர்கள், புதிதாக அரசு பணியில் சேர விண்ணப்பிக்கவில்லை; ஏற்கனவே பணியில் உள்ளவர்கள். அந்த அடிப்படையில், அவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப்பட்டுள்ளது. இதில் தவறு இருப்பதாக, இந்நீதிமன்றம் கருதவில்லை. எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என, உத்தரவிட்டது.
No comments:
Post a Comment