வெளிநாட்டு பல்கலைகளை, இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது, என, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க ஈரோடு செயலாளர் வெங்கடாசலம் கூறினார். மேலும், அவர் கூறியதாவது:
இந்தியாவுக்குள் வெளிநாட்டு பல்கலை, கல்லூரிகள் துவங்க, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர, காட் ஒப்பந்தம் வழி செய்துள்ளது. இதை அனுமதிக்கக்கூடாது. வெளிநாட்டு பல்கலை, கல்லூரிகள் வந்தால், இந்தியாவில் கல்வி தரம் உயரும், வேலைவாய்ப்பும், படிப்பதற்கான வாய்ப்பும் உயரும் என, சிலர் கூறுகின்றனர்.
கல்வி தரம் உயரும் என்றாலும், கல்வி கட்டணம் மிகக்கடுமையாக உயரும். இந்தியாவில் உள்ள கலாச்சாரம் அழிந்துவிடும். நமது பல்கலை, கல்லூரிகளில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, இதை அனுமதிக்கக்கூடாது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், பகுதி நேர பேராசிரியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இதை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள், ஐந்தாண்டு பணி நிறைவு செய்ததும், 6,000 முதல், 7,000 ரூபாய் வரை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது, 7 வது சம்பள கமிஷனை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது.
இதுபோன்று கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்ய, குழு அமைத்து சம்பளத்தை உயர்த்த வேண்டும். தற்போது, தமிழகத்தில் உள்ள, ஏழு பல்கலைகளில் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கல்லூரிகளில், 1,200 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி, அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment