'அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், பிற அரசு ஊழியர்கள் மீது, புகார் வந்ததும், அரசு அனுமதியின்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக, சிலர், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில், தமிழக அரசு, நேற்று முன்தினம், புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது.
அதில் கூறியுள்ளதாவது:
அரசு ஊழியர்கள் யார் மீதேனும், லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், புகாரை லஞ்ச ஒழிப்பு கமிஷனுக்கு அனுப்ப வேண்டும்.
கமிஷன், புகார் பதிவு செய்ய, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்த பின், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குனரகம், விசாரணை நடத்தலாம். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என இருந்தது. இப்போது, அரசு ஊழியர்கள் மீதும் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என, புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment