மதுரை அருகே ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக, மத்திய அரசு ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் அய்யலுராஜ் (48). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆசிரியைப் பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில், அய்யலுராஜுக்கு, திருமங்கலத்தைச் சேர்ந்த ஜெயப்பாண்டி என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அவர், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்கள் உள்ளதாகவும், அவர்கள் மூலம் அய்யலுராஜுவின் மனைவிக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் தபால் துறையில் பணிபுரியும் சேகர், கிலாடி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் அய்யலுராஜ் கடந்த 28.9.2015-இல் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். 4 மாதங்கள் ஆன நிலையில் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தர வில்லையாம்.
இது தொடர்பாக அய்யலுராஜ் அளித்த புகாரின்பேரில், திருமங்கலம் தாலுகா போலீஸார், ஜெயப்பாண்டி, சேகர், கிலாடி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment