அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, நூறு நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குக்கிராம மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 33 சங்கங்கள் இணைந்து, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், "சிறப்பு காலமுறை' ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, "காலமுறை' ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொது மக்கள், அரசு சார்ந்த எந்த பணிகளையும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில், குறைந்தது 200 பேர் முதல் ஆயிரம் பேர் வரை, பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். கண்மாய், குளங்களில் தூர் வாருதல், கரையை பலப்படுத்துதல் மற்றும் ரோடு பணிகள் என ஈடுபட்டனர்.
இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் 160 வரை அரசு வழங்கி வந்தது. தற்போது, அரசு ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்ததால், நூறு நாள் வேலை திட்டம் பிப்., 10-ந் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.
அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக, ஆங்காங்கே உள்ள ஊராட்சி தலைவர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் சார்பாக சுய உதவிக்குழு பெண்களை பிடித்து, பள்ளிகளில் சத்துணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், அரசு இயந்திரம் முழுவதுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
No comments:
Post a Comment