கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு சீட்டுடன் இணைத்து தைக்கும் பணி, நேற்று துவங்கியது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வில், முதல் முறையாக தமிழ், ஆங்கிலம், பாடங்களுக்கு அரை மதிப்பெண் வழங்க, முதன்மை விடைத்தாளில் பிரத்யேக புள்ளி வைத்த கட்டம் அச்சிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச் முதல் வாரத்தில் துவங்கவுள்ளன. இதற்கான, விடைத்தாள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதில், மாணவர்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய முகப்பு தாள், முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் தாள்கள் இணைத்து தைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், 93 மையங்களில் தலைமையாசிரியர்களின் பொறுப்பில் அனுபவம் மிக்க தையலர்களை கொண்டு, இப்பணிகள் நடந்துவருகின்றன.
தமிழ், ஆங்கிலம் தேர்வுக்கு மட்டும், 30 பக்கம் கொண்ட கோடிட்ட விடைத்தாள்களும், வழங்கப்பட்டு வருகிறது. விலங்கியல், தாவரவியல் பாடத்திற்கு தனித்தனியாக தலா, 22 பக்கமும், கணக்குபதிவியலுக்கு, 14 பக்கம் கோடிடப்படாத தாள் மற்றும் 15 முதல் 46 பக்கம் அக்கவுண்ட் பேப்பரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, 30 பக்கமும், பிற தேர்வுகளுக்கு தலா, 38 பக்கங்கள் கொண்டதாக விடைத்தாள்கள் தைக்கப்பட்டு வருகிறது.
வரலாறு பாடத்தில், நடுவில் உலக வரை படமும், அதே போல் கணிதப் பாடத்திற்கு கிராப் தாள்களும் இணைத்து தைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், பணிகள் மிகவேகமாக நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment