நிர்ணயிக்கப்பட்டக் கல்விக் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பள்ளிகளின் போக்கை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், அந்தப் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். கல்விக் கட்டணச் சீரமைப்புக் குழு: தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் என மொத்தம் 13 ஆயிரம் சுயநிதிப் பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வரன்முறை இல்லாமல் மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஆசிரியர்களின் சம்பளம், மின் கட்டணம், உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கிட்டு, அதன்படி ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியாகக் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்தது.
2011-ஆம் ஆண்டு முதல், கட்டணச் சீரமைப்புக் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு நியமனம் செய்யப்பட்டு, 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தக் குழு நிர்ணயித்தக் கட்டண விவரம், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் தொடர்பாக பெற்றோர்கள் இந்தக் குழுவிடம் எழுத்து மூலம் புகார் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பிறகு அந்தக் குழுவுக்கான புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை.
கூடுதல் கட்டணம்: இந்த நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை மே மாதம் முதல் நடந்து வருகிறது. தற்போது ஜூன் முதல் தேதியில் இருந்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படாததால், இதைப் பயன்படுத்தி பல பள்ளிகள் எந்த வரன்முறையும் இல்லாமல் மனம்போன போக்கில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வரை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பல பள்ளிகளில் கட்டணத்துக்கான ரசீது வழங்கப்படுவதில்லை. சில பள்ளிகள் ஒரு தொகையைப் பெற்றோரும், மீதித் தொகையை மாணவர்களே பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் மூலம் பள்ளி நிர்வாகத்துக்கு வசூலித்துக் கொடுக்கவும் நூதன ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அரசுக்கு களங்கம் விளைவிப்பது தவிர்க்கப்படுமா? என பெற்றோர் எதிர்பார்ப்பு: இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறுகையில், தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறைக்கென ரூ.4 ஆயிரம் கோடி வரை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்காகப் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களின் ஆதரவுடன் மீண்டும் தமிழக அரசு பொறுப்பேற்று நிலையில், இந்த அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இதுபோன்ற தவறான போக்கில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு ஈடுபட்டு வருகின்றன. இதை அரசு புரிந்து கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.
உரிய வழிகாட்டுதல் தேவை - பள்ளிகள்: இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- கடந்த 5 மாதங்களாக தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணச் சீரமைப்புக் குழுத் தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டுதல் இல்லாமல் எல்லா பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. இதுகுறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கப்படும்போது அதனைப் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றும் என்றார்.
புகார் தெரிவித்தால் நடவடிக்கை: கல்வித் துறை
இந்த விவகாரத்தில் புகார் அளிப்பது தொடர்பாகக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகளின் கூடுதல் கட்டண வசூல் குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக புகார் அனுப்பலாம். அவர்கள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மூலமாக ஆய்வு செய்யவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்வர் என்றனர்.
No comments:
Post a Comment