ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளி வரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
வழக்கமாக, மே மாதம் நடத்தி முடிக்க வேண்டிய கவுன்சிலிங், இந்த ஆண்டு தேர்தல் காரணமாக தள்ளிப்போனது. தேர்தல் முடிந்தும், பணி மாறுதலுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்படவில்லை.
இம்மாதத்திற்குள் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டாலும், அனைவரிடமும் மனுக்களை பெற்று, அதை பரிசீலனை செய்து, கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற, இரு மாதங்கள் ஆகிவிடும்.
இதற்கிடையில், இந்த ஆண்டு மே மாதம், ஏராளமான தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், பல பள்ளிகளில் சான்றிதழ் வழங்கும் பணி மற்றும் நிர்வாகத்தில் தேக்க நிலை காணப்படுகிறது. அந்த பணியிடத்திற்கு கவுன்சிலிங் மூலம் ஆட்கள் நிரப்பப்பட்டால் மட்டுமே, இதை சரிப்படுத்த முடியும்.
இது ஒருபுறமிருக்க, பணி மாறுதலை எதிர்பார்த்துள்ள பல ஆசிரியர்கள், இன்னும் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பணி மாறுதல் கவுன்சிலிங் குறித்து, அரசு விரைவில் முடிவை அறிவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment