கல்வித் துறையில், தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி விட்ட நிலையில், தமிழக மாணவ, மாணவியர், மெதுவாக, மாநில அரசு பாட முறைகளை கைவிட்டு, மத்திய அரசு பாட முறைகளைப் படிக்கத் தயாராகி வருகின்றனர். இதை உணர்ந்து விட்ட, தனியார் பள்ளிகள்,
இந்தாண்டு முதலே, தங்கள் பாட முறையை, மத்திய அரசு கல்வி முறையான, சி.பி.எஸ்.இ.,க்கு மாறத் தயாராகி விட்டன. ஆனால் இதற்கு, மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதை நீக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன.
தமிழகத்தில் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியன்டல் பள்ளிகளில், தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ளது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் எழுதுவதில், இந்தப் பாடத் திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் சிரமப்படுவதால், நுாற்றுக்கணக்கான பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்துள்ளன.
ஆனால், சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும் பள்ளிகள், தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும். 'இந்த சான்றைப் பெற, மறைமுகமாக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும்; லஞ்சம் கொடுக்காமல், என்.ஓ.சி., கிடைப்பதில்லை' என, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இவர்கள் சொல்வதில் உண்மை இருக்குமோ எனக் கருதும் வகையில், 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., இணைப்புக்கான என்.ஓ.சி., சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'பேப்சிட்' சார்பில், அதன் செயலர் இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம்:
தமிழக பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை கொண்டு வர, பல தரப்பிலும் கோரிக்கை உள்ளது. ஆனால், தமிழக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாறி வருகின்றன.இப்படி மாறும் பள்ளிகளுக்கு, தமிழக அரசின், என்.ஓ.சி., பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் தடையில்லா சான்று பெற, பல தடைகளையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் மறைமுகமாக, 40 லட்சம் ரூபாய் செலவு செய்தால் தான், என்.ஓ.சி., பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்கு முடிவு கட்டும் வகையில், தமிழக அரசின் தடையில்லா சான்று இல்லாமல், சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட இணைப்பு வழங்க, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளது.
தமிழக பள்ளிகள் விவரம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 665
மெட்ரிக் பள்ளிகள் 4,000
நர்சரி, பிரைமரி பள்ளிகள் 5,500
தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 4,500
ஆங்கிலோ இந்தியன்
பள்ளிகள் 41
உள்ளாட்சி கட்டுப்பாட்டு தொடக்க பள்ளிகள் 30,000
No comments:
Post a Comment