ஆபத்து காலத்தில் பெண்களுக்கு உதவுகிற வகையில் உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ (பேனிக் பட்டன்) வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு
நாடு முழுவதும் பரவலாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பாக பாலியல் குற்றங்கள் பெருகி வருகின்றன. இந்த தருணத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதத்தில் எந்தவொரு அவசர சூழ்நிலையிலும், ஆபத்திலும் பெண்கள் செல்போன் மூலம் போலீசை எளிதாக தொடர்பு கொண்டு, அவர்களின் உதவியை நாடும் வசதியை ஏற்படுத்தி தர மத்திய அரசு விரும்பியது.
அந்த வகையில், புத்தாண்டு (ஜனவரி, 1-ந்தேதி, 2017) முதல் விற்பனைக்கு வரும் எல்லா செல்போன்களிலும் ‘அவசர உதவி பட்டன்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கி மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டது.
தற்போதைய செல்போன்கள்
இந்த நிலையில் தற்போது உபயோகத்தில் இருக்கும் எல்லா செல்போன்களிலும் இந்த அவசர உதவி பட்டன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தொலை தொடர்புத்துறை உத்தரவிட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
தற்போது உபயோகத்தில் உள்ள செல்போன்களுக்கு, சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் புதிய சாப்ட்வேர் துணையுடன் இந்த வசதியை உருவாக்கித்தரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு காலத்துக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என கால வரையறை எதுவும் விதிக்கப்படவில்லை.
உதவி பெறும் வழி
அவசர உதவி பட்டனை(9 அல்லது 5 என்ற எண்ணை) அழுத்தினால், அது தானாகவே நெருக்கடி கால தொலைபேசி எண்ணான 112-க்கு (போலீசுக்கு) அழைப்பாக சென்று விடும்.
உடனடியாக அவர்களின் உதவியை பெறவும் வழி ஏற்படும்.
9 அல்லது 5 என்ற எண்ணை செல்போனில் அழுத்தி, 112- என்ற நெருக்கடி கால தொலைபேசி எண்ணை அழைக்கிற இந்த வசதி புத்தாண்டு (ஜனவரி, 1-ந்தேதி, 2017) முதல் அமலுக்கு வருகிறது. அதன்பின்னர் தற்போது அமலில் இருந்து வருகிற நெருக்கடி கால தொலைபேசி எண்கள் 100 (போலீஸ்), 102 (ஆம்புலன்சு), 108 (தீயணைப்பு படை), 1515 (ரெயில் குற்ற தடுப்பு) உள்ளிட்டவை படிப்படியாக வழக்கில் இருந்து ஒழிந்து போகும்.
இந்த வசதி பெண்களால் வரவேற்கப்படுவதாக அமையும்.
ஜி.பி.எஸ். வசதி
அடுத்த கட்டமாக 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் செயற்கைக்கோள் வழியாக இருப்பிடம் கண்டறியும் ‘ஜி.பி.எஸ்.’ என்னும் வசதியை கொண்ட செல்போனைத்தான் இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு கட்டாயம் ஆக்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment