தமிழக உயர்கல்வித்துறை மற்றும் பல்கலை, கல்லுாரிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள் எல்லாம், உயர் கல்வித்துறை மூலம் நிர்வாகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் உயர் கல்வி திட்டங்கள், உயர் கல்வி மன்றத்தால் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கு தலைவராக உயர் கல்வி அமைச்சர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலராக மூத்த பேராசிரியர் நியமிக்கப்படுவர். ஆனால், ஆறு மாதங்களுக்கு மேலாக, துணை தலைவர் பொறுப்பும், உறுப்பினர் செயலர் பொறுப்பும் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் முறையே, உயர் கல்வி செயலர் அபூர்வா, கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் ஆகியோர் கூடுதல் பொறுப்பில் உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலையில், ஓர் ஆண்டுக்கு மேலாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. அங்குள்ள தற்காலிக நிர்வாகத்துக்கான ஒருங்கிணைப்பு குழு தலைவராக, உயர் கல்வி செயலர் அபூர்வா செயல்படுகிறார். குளறுபடிகள் சென்னை பல்கலை, அண்ணா பல்கலையிலும் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளதால், ஒருங்கிணைப்பு குழு தலைவராக உயர் கல்வி செயலர் அபூர்வா பதவி வகிக்கிறார். இப்படி, உயர் கல்வித்துறையில், மூன்று முக்கிய பல்கலைகளிலும், உயர் கல்வி மன்றத்திலும் தலைமை பொறுப்பை, உயர் கல்வி செயலர் அபூர்வா தன் வசமே வைத்துள்ளதால், பல்கலைகள் மற்றும் உயர் கல்வி மன்றத்தின் செயல்பாடுகளில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் நிர்வாகம் தொடர்பான பணிகளில், பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர்களால் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க முடிய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்கலைகளின் நிர்வாக பொறுப்பு தலைவராக உள்ளதால், பல்கலைகளின் சிண்டிகேட் கூட்டத்திலும் உயர் கல்வி செயலர் அபூர்வாவின் ஆதிக்கம் உள்ளதாக பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாக்குவாதம்
சிண்டிகேட் கூட்டத்தின் விவாதப்பொருளான, 'அஜன்டா'க்களை முடிவு செய்வது, உயர் கல்வி செயலரின் வசமே உள்ளது. பிரச்னைகளுக்கு ஜனநாயக அடிப்படையில் சிண்டிகேட்டில் தீர்வு காண முடியாமல், செயலரின் முடிவுக்கு, உறுப்பினர்கள் வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளதாக, பல்கலை நிர்வாகத்தில் உள்ளவர்கள் குமுறுகின்றனர்.சென்னை பல்கலையில், நேற்று முன்தினம் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், 'அஜன்டா' குறித்து உயர் கல்வி செயலர், பேராசிரியர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டதே இதற்கு பெரிய உதாரணம். உச்சத்தில் இருக்கும் இந்த அதிகார போட்டியால், அனைத்து பைல்களும் உயர் கல்வி செயலர் அலுவலகத்தில் வந்து குவிகின்றன. காலதாமதம் அவற்றுக்கு தீர்வு காண மாதக்கணக்கில் காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது. பல பைல்கள் கையெழுத்துக்காக, செயலர் அலுவலகத்துக்கு சென்று மாயமாகி விட்டதாகவும், அவற்றை பல்கலை ஊழியர்கள் தினமும் தேடுவதாகவும், உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment