சிவகங்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பட்டதாரிகளிடம் பல லட்சம் ரூபாய் சுருட்டிய தனியார் சாப்ட்வேர் நிறுவனம் குறித்து விசாரிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காரைக்குடி யுனிக் சாப்வேட் நிறுவனம் இணைந்து ஏப்., 4 ல் வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200 க்கும் மேற்பட்ட பி.இ.,-எம்.பி.ஏ.,- எம்.எஸ்.சி., முடித்த இளைஞர்கள் பங்கேற்றனர்.
தேர்வானவர்களுக்கு தனியார் நிறுவன நிர்வாகி முகமது இஸ்மாயில் பணி நியமன ஆணை வழங்கினார். அதன் பின் 90 நாட்கள் பயிற்சி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் ரூ.8,500 வீதம் பல லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளார். முப்பது நாட்கள் மட்டும் பயிற்சி அளித்த நிலையில் அந்நிறுவனத்தை மூடிவிட்டு நிர்வாகி தப்பினார். பாதிக்கப்பட்டோர் நேற்று சிவகங்கை கலெக்டர் மலர்விழியிடம் புகார் கொடுத்தனர்.
மோசடி குறித்து விசாரிக்க மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ரசிகலாவை கலெக்டர் நியமித்துள்ளார். அவர் பாதிக்கப்பட்டோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இதுகுறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment