சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது.மருத்துவத்துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இதனால் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் அரசு அங்கீகாரம் பெறாமல் நர்சிங், லேப் டெக்னீசியன் போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மாணவிகள் சேர்க்கையை நடத்தி ஒவ்வொருவரிடமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வசூலிக்கின்றனர்.
சமீபகாலமாக கிராமங்களில் கூட நர்சிங் கல்லுாரி நடத்துகின்றனர். நேற்று திருப்புவனம் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் இயங்கிய அன்னை நர்சிங் கல்லுாரியை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், மருத்துவ இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி, சுகாதார துணை இயக்குனர்செந்தில், தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சேசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அந்த கல்லுாரி 2012 முதல் அனுமதி பெறாமல் நர்சிங் பயிற்சி நடத்தியது தெரியவந்தது. இதயடுத்து கல்லுாரி உரிமையாளர் காளிமுத்துவை அதிகாரிகள் எச்சரித்தனர்.
மருத்துவ இணை இயக்குனர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு நடத்துகிறோம். 20 நாட்களில் அனுமதி பெறாத அனைத்து கல்லுாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் ஒருசில கல்லுாரிகள் மட்டும் அனுமதி பெற்றுள்ளன, என்றார்.
No comments:
Post a Comment