ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' நடத்திய போராட்டத்தால், நேற்று வகுப்புகள் நடைபெறாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான, ஜாக்டோ நடத்திய போராட்டம், மூன்றாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால், போராட்டத்தால் பாதிப்பில்லை. ஆனால், நேற்று வேலை நாள் என்பதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் ஆசிரியர்கள் மறியலில் கைதாகினர். சில இடங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, ஊர்வலமாகச் செல்ல முயன்ற ஆசிரியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தியதில், தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில், சத்துணவு மட்டுமே வழங்கப்பட்டது; பாடம் நடத்தப்படவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் மூலம், மாணவர்களின் வருகை பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கணக்கெடுப்பு:
மறியல் போராட்டம் காரணமாக, பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் பட்டியலை, போலீசாரும், கல்வித் துறையினரும் தனித்தனியாக சேகரித்துள்ளனர். ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கும், உளவுத்துறை மற்றும் உள்ளூர் போலீசார், 'மப்டி'யில் சென்று, 'ஆப்சென்ட்' ஆன ஆசிரியர்களின் பெயர் விவரங்களை சேகரித்துள்ளனர்.ஆசிரியர் பணி பதிவேட்டில், போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான குறிப்புகள் இடம் பெறலாம் என்பதால், ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக்:பல கட்ட போராட்டம் நடத்திய பின்னரும், அரசு அழைத்து பேசவில்லை. இது தொடர்ந்தால், போராட்டம் இன்னும் வீரியமடையும்.தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி:அடுத்த கட்ட போராட்டம் குறித்து, உயர்மட்டக் குழு முடிவு செய்யும். பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் முடிவை எடுக்க நேரிடும்.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் துவங்கி உள்ளன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இறுதித் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு, போராடும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுடன், கல்வி அமைச்சர் நேரடியாக பேச்சு நடத்தி, சுமுகத் தீர்வு காண வேண்டும்.
வாசன். த.மா.கா., தலைவர்
No comments:
Post a Comment