'நெட் நியூட்ராலிட்டி' எனப்படும், இணைய சமநிலைக்கு வழிவகுக்கும் வகையில், இணையத்தில் வௌியாகும், 'கன்டென்ட்' எனப்படும், தகவல் தொகுப்பின் அடிப்படையில், மாறுபாடான கட்டணம் வசூலிக்கக் கூடாது; இணையத்தில் அனைத்து இணையதளங்களும் சமமாகவே பாவிக்கப்படும் என, 'டிராய்' நேற்று உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த, 'பேஸ்புக்' சமூக வலைதளத்துடன் சில இணையதளங்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ள, பேஸ்புக் நிறுவனம், 'பிரிபேசிக்ஸ்' என்ற இலவச திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த முன்வந்தது. அதற்கு, டிராய் உத்தரவு, பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இணைய சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. தன் உத்தரவை மீறி, இணையத்திற்கு மாறுபாடான கட்டணம் வசூலித்தால், இணைய சேவை வழங்கும் சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை வழங்கினால், நாள் ஒன்றுக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், டிராய் எச்சரித்துள்ளது. இணைய கட்டணம் குறித்த புதிய விதிகளை, டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா நேற்று அறிவித்த போது, இந்த தகவல்களை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: இணையதளங்களில் இடம்பெற்றுள்ள கன்டென்டிற்கு ஏற்ப,மாறுபாடான கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, இணைய சமநிலைக்கு எதிரானதாக அமையும். எனவே, மாறுபாடான கட்டண அறிவிப்புடன், எந்த தொலை தொடர்பு நிறுவனங்களும், யாருடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது.அதே நேரத்தில், அவசர கால சேவைகளுக்கான இணைய பயன்பாட்டிற்கு சில நிறுவனங்கள், கட்டணத்தை குறைவாக குறிப்பிடலாம். அதுவும், டிராய்க்கு தெரிவித்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.இணைய சேவை, அனைவருக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சமமாக கிடைக்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் குறித்து, இரண்டு ஆண்டுக்கு பிறகோ அல்லது வாய்ப்பான மற்றொரு நாளோ மறுஆய்வு செய்யப்படும். இவ்வாறு சர்மா தெரிவித்தார்.
No comments:
Post a Comment