வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடிப்பதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி தெரிவித்தார். 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 30-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர்.
இவர்கள் வேலையைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனால், ஆசிரியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய வேண்டும் என அரசு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். ராமசாமி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 4,000 பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1600 பேர் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் விடுமுறை எடுக்காமல் பணியைப் புறக்கணித்து, போராட்டத்தில் பங்கேற்றவர்களின் பட்டியலை தயாரித்து வருகிறோம்.
அரசு உத்தரவின்படி அவர்களது ஊதியத்தைப் பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment