இன்ஜி., கல்லுாரி அலுவலர்கள், பணி வரன்முறை கோரி, சென்னையில் உள்ள அண்ணா பல்கலை முன் மறியல் செய்ய முயன்றனர். அண்ணா பல்கலையில், ஆறு ஆண்டுகளுக்கு முன், 13 உறுப்பு கல்லுாரிகளான, அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 565 பேர், அலுவலர் மற்றும் ஊழியராக நியமிக்கப்பட்டனர். அனைத்து ஊழியர்களும், அந்தந்த மண்டல அலுவலகங்களின் நிர்வாக கட்டுப்பாட்டில் பணியாற்றினர்.
பின், மண்டல அலுவலகங்கள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு, சென்னை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. ஆனால், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில், 200 பேருக்கு பணி வரன்முறை வழங்கப்படவில்லை. மேலும் வருடாந்திர ஊதிய உயர்வும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து, பல முறை கோரிக்கை விடுத்த ஊழியர்களை, அண்ணா பல்கலை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் நேற்று, அண்ணா பல்கலை வளாகத்தை முற்றுகையிட்ட பல்கலை ஊழியர்கள், மறியல் செய்ய முயன்றனர். பல்கலை பதிவாளர் கணேசன், ஊழியர்களை அழைத்து பேச்சு நடத்தினார். இம்மாத இறுதிக்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததால், ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment