எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாகச் சாடியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என்று விருது வழங்கலாம். ஒரு பிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி, இன்னொருபிரிவினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கும் பாரபட்சமான அணுகுமுறையை பின்பற்றக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார்.
அதனால் தான் 5ஆண்டுகளாக எந்த பிரிவினருக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார்.ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் நான் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். அதன்பிறகும் அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனால் ஆசிரியர்கள் நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளை ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் நடத்தவுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் ஒரு கோடி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.அதேபோல், புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 60 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் பிப்ரவரி 8&ஆம் தேதி சென்னையில் உண்ணாநிலை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
அந்த போராட்டத்திற்கு பலன் கிடைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால் ஒட்டுமொத்த நிர்வாகமும் நிலைகுலைந்து விடும். தமிழகத்திற்கோ, தமிழக மக்கள் நலனுக்கோ இது எந்த வகையிலும் நல்லதல்ல.தமிழக மக்களின் நலனில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறை மூலம் கைது செய்திருக்கிறது. அதேபோல், தங்கள் கோரிக்கைகள் பற்றி விளக்குவதற்காக சந்திக்க வந்த அரசு ஊழியர்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும் பல மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு தங்களை சந்தித்த அரசு ஊழியர்களிடம் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இதனால் அரசு ஊழியர்களின் உண்ணாநிலை போராட்டம் உறுதியாகியுள்ளது.2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க.தேர்தல் அறிக்கையில்,‘‘அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது நிறைவு செய்யப்படும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் துறை மற்றும் நிர்வாக ரீதியான பணி சிக்கல்கள் ஆராயப்பட்டு அவற்றை சீராக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய முறைக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
ஆனால், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றவில்லையோ, அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார். முந்தைய ஆட்சியின் போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்தம் மேற்கொண்ட அரசு ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்ததுடன், ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தஜெயலலிதா, இன்னும் திருந்தவில்லை என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஜெயலலிதா வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்ற மாட்டார்.தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க. விரும்புகிறது. அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பா.ம.க. வரைவுத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அடுத்த சில நாட்களில் சந்தித்து பேசி, சமூக ஒப்பந்தம் செய்து கொள்ளவுள்ளார். பா.ம.க. ஆட்சிக்குவந்தவுடன் சமூக ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று உறுதிஅளிக்கிறேன்.
No comments:
Post a Comment