Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 13, 2014

    இன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. Dinamani

    தாய்மொழிக்கு எதிரான உச்சபட்ச அநீதி அண்மையில் கர்நாடக மாநில அரசின் தொடக்கப் பள்ளிகளில் கன்னடம் ஐந்தாம் வகுப்பு வரை பாடமொழி என்ற நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பனையேறி விழுந்தவனைக் கிடாய் ஏறி மிதித்ததுபோல்

    விபரீதமானது. இந்தியாவின் மாநில மொழிகள் அனைத்தின் எதிர்கால நிரந்தர அழிவுக்கு வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கிற வன்கொடுமைக்கு வரவேற்புத் தருவது.

    தாய்மொழியை எப்பாடு பட்டேனும் காக்க உறுதி பூண்டிருக்கும் மக்கள் இந்தத் தீர்ப்பை அடியோடு மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.
    கர்நாடக அரசு சில ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் கல்விக் கொள்கை - தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி வழிக் கல்வியே அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். இதுபோன்றே இன்னும் விரிவாகத் தாய்மொழியின் இடத்தைக் காப்பாற்றக் கேரள அரசும் ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.
    தமிழகம் தாய்மொழி வழிக் கல்வியைப் புறந்தள்ளுவதுபோல, மேலும் மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க முயன்று வருவது கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும் முரண்பட்ட ஒரு போக்காக நிலவி வருகின்றது.
    மாநில அரசு மாநில மக்களின் நலன் கருதி முடிவெடுக்கும் உரிமை உடையது என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் புறந்தள்ளியிருக்கிறது. "வேலைவாய்ப்புக்கு ஆங்கிலம்' என்ற தனியார் பள்ளித் தரப்பு வழக்குரைஞர் கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றிருப்பதும், சிறுபான்மை மொழியினர் மீது மாநில மொழியைத் திணிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று கூறியிருப்பதும் இன்னும் நாம் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுபடவே இல்லை என்பதன் விசுவரூபச் சான்றுகளாய் ஓங்கி நிற்கின்றன.
    சிறுபான்மை மொழியினர், சமயத்தினர் பெரும்பான்மை மக்களின் மொழியை அடக்கி ஒடுக்கும் உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருப்பதாக நீதி உலகம் கருதுமேயானால் அந்தச் சட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டிய அவசர அவசியம் நேர்ந்திருக்கிறது.
    சிறுபான்மை மக்கள் தங்கள் மொழி, சமயம், பண்பாடுகளைக் காக்க உதவுவது ஒரு நாட்டின் கடமை. ஆனால், இந்த உரிமையின் பெயரால் நடத்தப்படும் நிறுவனங்களில் மாநில மொழியை அறவே நீக்கி, அவர்களுடைய தாய்மொழி அல்லாத ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக்குவது என்ன நியாயம்?
    ஒரு சுதந்திர நாட்டில் இவ்வாறு கல்வியென்ற பெயரால் தனித்தீவுகளை உருவாக்குவது சிறுபான்மை மக்களின் மொழி, சமயப் பண்பாட்டின் அடையாளமா?
    சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களில் சிறுபான்மை மக்கள் மட்டுமே பயில்கிறார்களா? லாபத்துக்குப் பயன்பட எல்லா மக்களையும் சேர்த்துத்தானே கல்வி நிலையங்கள் நடத்துகிறார்கள்? அப்படிப்பட்ட நிறுவனங்களைச் சிறுபான்மையினர் நிறுவனம் என்று கூறுவது எந்த வகையில் சரியாகும்?
    "வேலை வாய்ப்புக்கு ஆங்கிலம்' என்பது மிக மிகப் பொய்யான ஒரு மோசடி. ஆங்கில ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் கற்றவர்கள் குடியரசுத் தலைவர் ஆகவில்லையா? அமைச்சர்கள் ஆகவில்லையா? கண்டுபிடிப்புகள் செய்யவில்லையா?
    பள்ளிக்கல்வி தாய்மொழியில் இருப்பதால் ஆங்கிலம் கற்க முடியாது என்பது கடைந்தெடுத்த மாயை - கற்பிக்கப்படுகிற மாய்மாலம் - மீண்டும் காலனியத்தை அறைகூவி அழைக்கிற பிற்போக்குத்தனம். பழைய தலைமுறை, ஆங்கிலத்தைப் பள்ளியில் ஒரு மொழியாக உயர்நிலை வகுப்புகளில்தானே கற்று முன்னேறியது?
    இன்றைய தலைமுறை தாய்மொழியைப் பயின்றபடியே ஆங்கிலத்தில் வல்லமை பெற முடியாது என்பது ஆங்கில வழிப் பள்ளிகள் உருவாக்கி வைத்திருக்கும் பணக்கொள்ளைத் திட்டம். இதை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தாய்மொழிக்கு எதிரான உச்சபட்ச அநீதி.
    இன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னாலும் அந்த அரசுகள் தாய்மொழியைக் கைவிட ஒருபோதும் முன்வரப் போவதில்லை.
    எடுத்துக்காட்டாக கேரள அரசின் முழுமையான தாய்மொழிக் கல்வித் திட்டத்தின் கூறுகளை இங்கு கூறுவது பொருந்தும். பள்ளிக் கல்வியில் முதல் மொழியாக மலையாளத்தைக் கொண்டு வரும் அரசின் ஆணையை சி.பி.எஸ்.. பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றம் மூலம் தடுத்துவிட்டன. அதன்பின் கேரள அரசு முழுமையான ஒரு கல்வித்திட்டத்தை வகுத்திருக்கிறது. அதன் முக்கியமான பகுதிகள் வருமாறு:
    மழலையர் பள்ளி முழுவதும் தாய்மொழிக் கல்வியே பின்பற்றப்பட வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தாய்மொழி முதல் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். சி.பி.எஸ்.., .சி.எஸ்.. முதலிய மத்திய பாடத்திட்டப் பள்ளிகளிலும் தாய்மொழியே முதல்மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும்.
    சிறுபான்மை மொழியின் பள்ளிகளில் அந்த அந்தச் சிறுபான்மையினர் மொழி தவிர, மாநில மொழியும் கற்பிக்கப்பட வேண்டும். அரபி, கீழ்த்திசை மொழிகள் கற்பிக்கும் நிறுவனங்களில் மாநில மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். மாநிலத்திற்கு வெளியே இருந்து வருபவர்களும் மலையாளம் கற்க வேண்டும்.
    பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி படிக்கிற மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டரிலும் குறைந்தது ஒரு மலையாள மொழித் தாளேனும் தேர்வு எழுத வேண்டும். மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட மேற்கல்வி நிறுவனங்களில் மலையாளம் படிக்க வசதி செய்யப்பட வேண்டும்.
    மழலையர் பள்ளிகள் ஆதிவாசி, பழங்குடி இன மாணவர் படிக்கும் நிறுவனமாக இருந்தால் அவர்கள் தாய்மொழியிலேயே கல்வி அமையலாம். தொழில்கல்வி நுழைவுத் தேர்வைத் தாய்மொழியில் எழுதுபவர்களுக்கு ஐந்து மதிப்பெண் கூடுதலாக அளிக்கப்பட வேண்டும்.
    ஆய்வுகள் (முனைவர் பட்டமாயினும் எம்.ஃபில் பட்டமாயினும்) தாய் மொழியில் எழுதப்பட ஊக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்ற மொழியாகத் தாய் மொழியே அமையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    இவையெல்லாம் கேரள அரசு கொண்டுவரவிருக்கின்ற தாய் மொழிச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. உச்சநீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு இச்சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்ய அரசைத் தூண்டும்.
    ஆனால் தாய் மொழிக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரும் முயற்சியில் கர்நாடகமும் கேரளமும் தயக்கமின்றி ஈடுபடவுள்ளன என அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
    "வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண் மொழி' என்று வாய் வேதாந்தம் பேசும் நாம் நம் தாய்மொழியைக் காக்க என்ன செய்யப் போகிறோம்? "வயிற்றுக்கு ஆங்கிலம் - வாழ்வுக்குத் தமிழ்' என்று மாயம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோமா?
    அல்லது பக்கத்து மாநிலங்களின் மொழியுணர்வு கண்டும் "வேடிக்கை மனிதர்களாய்' வீழ்ந்து கிடக்கப் போகிறோமா?
    நம் குழந்தைகள் அன்னிய மொழி பேசி அகில உலகையும் ஆளப்போவதை நினைத்துப் பெருமிதம் கொள்ளப் போகிறோமா? அல்லது சொந்த மொழி கண்ணுக்கு முன்னால் அணு அணுவாய்ச் சாவதை அனுபவித்து ரசிக்கப் போகிறோமா?
    "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டி நகையாரோ?'
    என்று கவிஞன் இகழ்ந்த பேதைமைக்கு ஆளாகப் போகிறோமா? அல்லது அவன் பெயராலேயே ஆங்கிலவழித் தொடக்கப்பள்ளிகள் நிறுவி அவனை வஞ்சப் புகழ்ச்சியால் ஆராதிக்கப்போகிறோமா?
    "வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
    வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ'
    என்று அவன் சொன்ன வார்த்தைக்கு இசைய வெளிநாட்டிலேயே வாழத் தீர்மானித்து விட்டோமா?


    தமிழரும், தமிழ்நாடும், தமிழக அரசும் "உண்ணும் நீரினும், உயிரினும்' மேலான தாய்மொழியைக் காக்க எண்ணுவார்களா? அல்லது இன்னொரு காலனியுகம் பண்ணுவார்களா?