கல்வித்துறையின் அலட்சியத்தால், உடுமலையில் கிராமப்புற அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை போதுமான அளவில் இந்தாண்டு இல்லை; இது அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைபாட்டை தவிர்க்க, பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி, துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் செயல்வழிக் கல்வி முறை உள்ளிட்ட மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்க பல்வேறு பயிற்சிகளை கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறை, மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், பள்ளியின் கட்டமைப்பு குறித்து கண்டுகொள்வதில்லை என்றும், ஆசிரியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. உடுமலை மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், அப்பள்ளிகளில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு மோசமாக உள்ளது. அடிப்படை தேவையான கழிப்பறை, வகுப்பறை வசதிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் உள்ளன. சில பள்ளிகளில் கழிப்பறை வசதி கூட இல்லை. இதனால், இப்பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வராத நிலையே கிராமப்புறங்களில் நிலவுகிறது; இங்குள்ள பல அரசுப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில்தான் உள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில், பல ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளியின் தேர்ச்சி விகிதம், முதல் மதிப்பெண் உள்ளிட்ட கல்வித்தகுதிகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவை, மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர்கள் முதன்மையான வசதிகளாக எண்ணுகின்றனர். இந்நிலையில் ஜல்லிப்பட்டி, பூலாங்கிணறு, அந்தியூர், கல்லாபுரம், பாப்பான்குளம், திருமூர்த்திநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால், கல்வி வளர்ச்சி இருந்தும் பெற்றோர்கள் அவற்றில் சேர்க்க தயங்குகின்றனர். பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பிற்கு இதுவரை ஆறு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். அந்தியூர் அரசுப்பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். மாணவர்களின் கற்கும் திறன் மட்டுமே கல்வி மேம்பாடு அல்ல, பள்ளியின் வளர்ச்சி அல்ல என்பதை கல்வித்துறையினர் புரிந்து கொண்டு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த முன்வர வேண்டும். கிராமப்புற அரசு பள்ளிகளில் கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: அரசுப்பள்ளிகள் சிலவற்றில், வசதிகள் இருந்தும், சுற்றுப்பகுதிகளில் உள்ள மர்ம ஆசாமிகளால் அவை சேதப்படுத்தப்படுகின்றன. இப்பிரச்னைகளுக்கு முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. கல்வித்துறையின் இதுபோன்ற அலட்சியத்தால் பள்ளிகளில் கல்வித்திறன் இருந்தும், பயனில்லாமல் உள்ளது. பள்ளிகள் சீரமைக்கப்பட்டால் மட்டுமே பெற்றோர்களுக்கு அரசுப்பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படும். விரைவில் கல்வித்துறை பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 comment:
ul kattamaipodu padavariyaga asiriyar niyamanamum avasiyam thevai. mozhipada asiriyargale kanitham , ariviyal nadathinalum manavar serkkai kuraiyum.
Post a Comment