விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு முடித்து, பிளஸ் 2 படிக்காமல் கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமோ படித்தேன். தொடர்ந்து பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பட்டம் பெற்றேன். பின்னர் குமாரலிங்கபுரத்தில் உள்ள கல்வியியல் கல்லூரியில் கடந்த 2013ல் பிஎட் படிப்பில் சேர்ந்தேன்.
அனைத்து விதமான கட்டணங்களையும் செலுத்தி விட்டேன். செய்முறைத் தேர்விற்கு சென்றபோது பிளஸ் 2 படிக்காததால் கலந்து கொள்ள முடியாது என கூறினர். தேர்வுக்கு பின் தகுதியில்லை என தெரியவந்தால் எனது பிஎட் படிப்பை ரத்து செய்து கொள்ளலாம் என பிரமாண வாக்குமூலம் எழுதிக் கொடுத்தேன்.இதை வாங்கி கொண்டு செய்முறை தேர்வுக்கு என்னை அனுமதித்தனர்.
நாளை (இன்று) முதல் எழுத்து தேர்வு துவங்குகிறது. இதற்கான ஹால் டிக்கெட் இன்னும் எனக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது ஏற்கனவே கூறிய காரணத்தையே மீண்டும் தெரிவித்தனர். அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் டிப்ளமோ படிப்பு, பிளஸ் 2 படிப்புக்கு சமமானது என கூறப்பட்டுள்ளது. எனவே, எழுத்து தேர்வில் கலந்து கொள்ள என்னை அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதேபோன்ற மனுவை விருதுநகரைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரும் தாக்கல் செய்திருந்தார். இரு மனுக்களையும் நீதிபதி ஆர்.கருப்பையா விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் டிப்ளமோ படிப்பு, பிளஸ் 2 படிப்புக்கு சமமானது என வாதிடப்பட்டது. இதையடுத்து, இருவரும் பிஎட் தேர்வு எழுதலாம் என அனுமதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment