மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளியன்று காலை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றிருந்ததால், மாவட்ட வருவாய் அலுவலர் மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் கொடுமை என்னவென்றால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் யாருமில்லை என்பது தான். தேர்வில் வெற்றியடைந்த மாணவ,மாணவியர் குறித்த தகவல்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஊரில் இல்லாத நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுவாமிநாதன், மாவட்ட கல்வி அதிகாரி ஜெயமீனாதேவி ஆகியோர் இப்பணிகளைச் செய்தனர்.
முதலில் அவர்கள் வழங்கிய விபரங்கள் என்பது மதுரை மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர்கள் என ஒரு பட்டியலைத் தந்தனர். மூன்று பக்கங்களில் தயார் செய்யப்பட்ட அந்த செய்தி முழுவதும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் பட்டியலாகவே இருந்தது. அரசுப்பள்ளி குறித்த விபரங்களைக் கேட்டதற்கு அவர்கள் தரவில்லை. இதன் பின் விரிவான செய்தி தரப்படும் என பத்திரிகையாளர்களுக்கான பேட்டி பிற்பகல் 11.45 மணிக்கு என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற்பகல் 12.45 மணி வரை பேட்டி துவங்கவில்லை. ஒரு மாணவருக்காக காத்திருக்கிறோம் என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.அவர் வந்த பின், முதலிடம் பிடித்த மாணவ,மாணவியருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லோ.சிற்றரசு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அப்போது அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் குறித்த விபரங்களைக் கேட்டதற்கு, மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட பட்டியல் செய்தியாளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதில் சாதனைப்படைத்த அரசுப்பள்ளிகளின் மாணவ,மாணவியர்களின் எந்த விபரங்களும் இல்லை. எந்தப்பள்ளியில் எவ்வளவு பேர் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்கள் என்ற விபரமே வழங்கப்பட்டது. அதில் மெட்ரிக் பள்ளியில் இருந்து எவ்வளவு பேர் தேர்வெழுதினார்கள் என்ற விபரங்கள் இருந்தது. ஆனால், மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கான முதலிடம் பிடித்தவர்களின் பட்டியல் தனியாக தயாரித்து கல்வித்துறை அதிகாரிகளால் வழங்கியதன் நோக்கம் புரியவில்லை.மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90.54 சதவீதம் என கல்வித்துறை தயாரித்துக்கொடுத்த பட்டியலில் இருந்தது. ஆனால், மதுரை மாநகராட்சியில் இருந்து ஒவ் வொரு பள்ளியும் பெற்ற மதிப்பெண் விபரங்களுடன், 94.48 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்ற விபரம் தரப்பட்டது.
இதில் யார் கொடுத்த புள்ளி விபரம் சரி எனத் தெரியவில்லை. அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டு தனியார் பள்ளிகளுக்கு விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சும் கல்வித்துறை அதிகாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இதுதான் நிலை. அரசுப்பள்ளிகளின் சாதனைகளை வெளியில் சொல்லக்கூட கல்வி அதிகாரிகள் தயங்குகிறார்கள்.
1 comment:
ஏன் எந்த ஆசிரியரும் அல்லது அரசு அதிகாரிகளும் அருகாமை பள்ளி திட்டத்தை கோருவதில்லை இதன் ரகசியம் என்ன ? இதுபற்றி அணைத்து ஆசிரியர்களும் அரசுக்கு தெரிவித்தால் அரசு பள்ளிகள் உயிர்பெறும்
Post a Comment