போடியில் பார்வை குறைபாடு உள்ள ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளி மாணவி 10 ம் வகுப்பு தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பார்வை குறைபாடு, காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுகின்றன.
போடி எஸ்.எஸ்.புரத்தில் வசிப்பவர் பரமானந்தம் 45. கொத்தனார். இவரது மனைவி சாந்தி, 35. இவர்களது மகள் பரனீஸ்வரி, இவருக்கு பார்வை குறைபாடு உள்ளது. கண்களில் வெளிச்சம் படும் போது கூச்சம் ஏற்படும். இதனால், வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலையில், வீட்டிற்குள்ளேயும் வெளிச்சம் குறைந்த பகுதிகளிலும் இருக்க வேண்டிய நிலை.
பரனீஸ்வரி, தேனி மாவட்டம் போடி ஜ.கா.நி.,மேல்நிலைப்பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து 481 மதிப்பெண் பெற்று சிறப்பு பள்ளி மாணவர்கள் அளவில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ் 94, ஆங்கிலம் 95, கணிதம் 100, அறிவியல் 97, சமூக அறிவியல் 95, பெற்று சாதனை படைத்துள்ளார்.
மேலும், பார்வை குறைபாடு உள்ள மாணவர் முத்தழகு என்பவர் 427 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ்-84, ஆங்கிலம்-75, கணிதம்-80, அறிவியல்-93, சமூக அறிவியல் 95.
அதிக மதிப்பெண் பெற்ற பார்வை குறைபாடு உள்ள மாணவி பரனீஸ்வரி, மாணவர் முத்தழகு உள்ளிட்ட மாணவர்களை பள்ளி தலைவர் ராஜகோபால், செயலாளர் சங்கரபாண்டியன், தலைமையாசிரியர் சோமசுந்தரம் உட்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவி பரனீஸ்வரி கூறுகையில், "50 சதவீதம் மட்டுமே பார்க்க முடியும் நிலையில், கேட்கும் செவித்திறன் மூலமும், சிறிது பார்வையின் மூலம் விடாமுயற்சியுடன் படித்தேன். "டிகிரி" படித்து என்னை போல குறைபாடு உள்ளோருக்கு பாடம் நடத்தும் வகையில் பேராசிரியராவதே லட்சியம்" என்றார்.
No comments:
Post a Comment