Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 26, 2014

    திட்டமிடப்பட்ட வெற்றி என்பது உண்மையா? - சிறப்புக்கட்டுரை

    மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வை, 10 லட்சத்து 20 ஆயிரத்து 749மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய5 லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.7 ஆகும். 7 லட்சத்து 10ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம் அதிகரித்துள்ளது.


            முதலிடத்தை 19 பேரும், இரண்டாம் இடத்தை 125 பேரும், மூன்றாம் இடத்தை 321 பேரும் பிடித்துள்ளனர். இது சாதனை அல்ல! வேதனை!!

              சில வருடங்களுக்கு முன்னர் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பது என்பது மிகக் கடினம் மட்டுமல்ல; கடின உழைப்பு மற்றும் அயராது உழைத்த உழைப்பின் பலன். ஏனெனில் அப்போதைய வினாத்தாட்களில் சில வினாக்கள் சிந்திக்கத் தூண்டுவனவாகவும்,challenging ஆகவும் இருந்தன. ஆனால் இன்றைய வினாத்தாட்கள் அப்படிப்பட்டவை அல்ல. வினாத்தாள்களில் உள்ள வினாக்கள் மிக எளிமையாகவும், புத்தகத்திலுள்ள வினாக்களாகவே கேட்கப்படுகின்றன.

              பாட வினாவிலுள்ள சொற்கள் மாறாமலும், கணக்குப் பாட வினாவிலுள்ள எண் மாறாமலும் இருக்கின்றன. மனனம் செய்பவர்களே திறமைசாலிகள் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் வினாத்தாட்களாகவே அமைக்கப்படுகின்றன.

               பெரும்பாலானவர்கள் வினாவைப் படித்தவுடன், கொடுக்கப்பட்ட விடைகளிலிருந்து தேர்ந்தெடுக்காமல், விடையை எழுதிவிடுகின்றனர் (சூப்பர் நினைவாற்றல்!?). சிறிது மாற்றம் செய்தால், அதை அறியாமல் தவறாக எழுதுவர். உடனே ஆசிரியர் சங்கங்கள் வினாத்தாள் கடினம். 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கை குறையும் என கூக்குரலிடும்.


              கணிதத்தில் 18 ஆயிரத்து 682 பேரும், அறிவியலில் 69ஆயிரத்து 590, சமூக அறிவியலில் 26 ஆயிரத்து 554 பேரும் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

               அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட,கணிதப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுப்பது எளிது. ஆனால்,இந்தமுறை கணிதப் பாடத்தைவிட, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் எண்ணிக்கை பெரிய வித்தியாசத்தில்அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என ஆசிரியர்கள் மத்தியில் உலா வரும் சில எண்ணங்கள்.

             கணிதப்பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாய வினா சற்று கடினமாக இருந்ததால் இவ்வருடம் இப்பாடத்தில் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்றவர்கள் குறைவு.

            அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு(?)க்கு 25 மதிபெண்கள் பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 75 மதிப்பெண்களுக்கு 2.30 மணி நேரத்தேர்வு. பெரும்பாலான வினாக்கள் பாடப்புத்தகத்திலுள்ள வினாக்களே!

              சமூக அறிவியல் பாடத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் பாடப்புத்தகத்திலுள்ள வினாக்களே! மிக எளிமையான வினாக்களே!

               அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு இருப்பதால் அறிவியல் தேர்ச்சி எளிது என்றும், 100 க்கு 100 வாங்குவது சிரமமில்லாத செயல் என மற்ற பாட ஆசிரியர்கள் நினைக்கின்றனர். செய்முறைத் தேர்வு இருந்தால் தமிழ், ஆங்கிலம், கணக்கு மற்றும் சமூக அறிவியல் பாடங்களின் தேர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்வாறும், 100 க்கு 100 வாங்குவது சிரமமில்லாத செயல் எனவும் மற்ற பாட ஆசிரியர்கள் நினைக்கின்றனர். அவர்கள் எண்ணத்தை ஏற்கும் வகையில் அரசும் நடந்து கொள்கிறது.

                   இவ்விரு எண்ணங்களுமே தவறு. அறிவியல் உட்பட எல்லா வகையான பாடங்களிலும், வகுப்புகளிலும் செய்முறைத் பயிற்சி இருக்க வேண்டுமே தவிர செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை. செய்யும் முறையைக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதும். செய்முறைகளைக் கற்றுக் கொண்டு பயிற்சி பெறுபவர்கள் சிறப்பான வகையில், வாழ்விலும், வேலை செய்யும் இடங்களிலும் வெற்றி பெறுவர். செய்முறைத் தேர்வு மதிபெண்களுக்காக 10, 12 மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் அல்லல்கள் அகலும். செய்முறைத் தேர்வு மதிபெண்களுக்காக மாணவ, மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் படும் பாட்டை அனைவரும் அறிவர்.

               பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்ச்சிப் புள்ளிவிவரம் எதை உணர்த்துகிறது? மாணவர் கல்வித்தரம் உயர்ந்ததையா? சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் தரம் குறைவானது என்பதையா? வரப்போகும் CCE முறையால் 100 க்கு 100 சதவீத தேர்ச்சி பெறப்போவது இயல்பானது தான் எனும் எண்ணம் சிறுக சிறுக விதைக்கப்படுவதையா?

              கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் எதையோ சொல்லாமல் சொல்கின்றன. அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மிக எளிமையாக கேட்கப்படுகின்றன. புத்தகத்திலுள்ள வினாக்கள் மட்டுமே கேட்கப்படுவது அதிகரித்துக் கொண்டும், பாடங்களில் உள்ளேயிருந்து கேட்கப்படும் வினாக்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் தேர்ச்சி அதிகரிக்கிறது. கல்வித்தரம் உயர்வதைக் காட்டவில்லை.

             அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வெற்றியின் வெளிப்பாடாக ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.ஏ. வின் புண்ணியம்) வரை அனைவருக்கும் கட்டாயத் தேர்ச்சி. 9 ஆம் வகுப்பிலும் (ஆர்.எம்.எஸ்.ஏ. வின் புண்ணியம்) அனைவருக்கும் தேர்ச்சி. தேர்ச்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் தரம்? ஆண்டு இறுதியில் தேர்வு உண்டு! ஆனால் கல்வி அடைவு குறித்த மதிப்பீடு இல்லை. எனவே, கல்வி கற்பித்தல் சம்பிரதாயமாகிவிட்டது. கல்வி அடைவு கேள்விக்குறி ஆகிவிட்டது. அரசின் நலத்திட்டங்களை உரிய நேரத்தில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியக் கட்டாயத்திலிருக்கும் கல்வி ஆய்வாளர்களின் பள்ளி ஆய்வு செயல்பாடு (சம்பிரதாயம்) இல்லாமல் போய்விட்டது.

              அரசு ஒரு வருடம் முழுவதும் நடத்த ஒரு பாடப்புத்தகத்தை வெளியிடும். அது நடத்தி முடிக்கப்படும் போது, ஒவ்வொரு பாடத்திற்கும், சில குறிப்பிட்ட வினாக்களை மட்டும் கொண்ட புத்தகத்தை வெளியிடும். மாணவர்கள் தேர்ச்சியடைய அதிலுள்ள வினாக்களுக்கான விடைகளை மட்டும் படித்தால் மட்டும் போதும் என்று கல்வித்துறை சார்பில் பயிற்சிகள் நடத்தப்படும். அதிலுள்ள வினாக்களே அரசுப் பொதுத்தேர்வில் கேட்கப்படும். தேர்ச்சி சதவீதம் உயரும்.

                  இவ்வாறே அரசு செயல்படுவதால், கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அடுத்த வருடம் பத்தாம் வகுப்பிற்கும் CCE முறை கொண்டுவரப்படலாம் என கருதப்படுகிறது. அப்போது 100 சதவீத தேர்ச்சி [FA க்கு 40 மதிப்பெண்கள், SA க்கு 60 மதிப்பெண்கள்] நிச்சயம்.

            அது எங்கள் அரசு செம்மையாக திட்டமிட்டு செயல்பட்டதால் இது சாத்தியமானது என அரசு சொல்லிக்கொள்ள வழிவகை செய்வது போல இத்தேர்ச்சி விழுக்காடு உயர்வு அமைந்துள்ளது.


          சரியான கல்வியைக் கற்றுக்கொள்ளாமல், தேர்ச்சியடைவதால் மேற்கொண்டு படிக்கும்போது மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். They are completed their study without qualification. சரியான கல்வியைப் பெறாமல், மேல்படிப்பிற்கு தகுதி பெறுகிறார்கள். தொடர்ந்து வெற்றிகரமாக படிக்க முடியாமையால் ஏற்படும் சமுதாய சீர்கேடுகள் ஏராளம்.

             வினாக்களின் விடைகளை மனப்பாடம் செய்து, வாந்தியெடுக்கும் Talking Tom களை உருவாக்கும் கல்வி வியாபார நிறுவனங்கள் அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்து தங்கள் சாதனையை (?!?!?!) பறைசாற்றிக் கொள்கின்றன.

               பத்தாம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் அதிகமாக இருக்கலாம். தரம் கேள்விக்குறியே!


                       அரசுப் பள்ளி ஒன்றில், சரியாக சிறு தேர்வு எழுதாத மாணவனைப் பார்த்து ஆசிரியை கண்டிப்புடன், ”நீ சரியாக படிக்கவில்லை என்றால் ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைவாய்” எனக் கூறியவுடன், அம்மாணவன் ஆசிரியையிடம், ”சும்மா காமெடி பண்ணாதீங்க மிஸ்! நான் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன். என்னை உங்களால் பெயிலாக்க முடியாது மிஸ்” என்றான். இதுதான் அரசுப் பள்ளிகளின் நிலை.

                      படிப்பை மட்டும் சொற்களில் சொல்லி கொடுத்து, படிப்பின் தன்மை, புரிந்துகொள்ளும் திறன், பயன்படுத்தும் ஆற்றல் மற்றும் செயலாக்கத்தை கற்று கொடுக்காமல் இருந்தால், தமிழக பட்டதாரிகளின் பட்டங்கள் வெறும் தாளாக மட்டுமே பார்க்கப்படும் காலம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்கள் பொறியியல்படிப்புகளில் மிக கீழே உள்ளார்கள் என்று பாபா அணு விஞ்ஞான கழகம் கூறி இருக்கிறது. அடுத்த மாநிலத்தவர்கள் கிண்டலும் கேலியும்செய்வர். இவர்களுள் எத்துனை பேர் IIT Exam அல்லது SAT எக்ஸாம் வெற்றி பெறுவார்கள்? IIT, AIEE போன்ற உயரிய கல்லூரிகளில் சேர முடிவதில்லை. ராஜஸ்தான், பீகார், ஆந்திரா மாணவ மாணவிகள் எளிதாக நுழைந்து விடுகிறார்கள். அகில இந்திய அளவில் நடக்கும் தகுதித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலூர் விஐடி [VIT] தகுதித் தேர்வுகள், . . . போன்றவற்றில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்கள் மற்ற மாநிலத்தவரை விட மிகக்குறைவு.

                   கிரிக்கெட் விளையாட்டு மீது திட்டமிட்டு மோகத்தை ஏற்படுத்தி அகில இந்திய அளவில் மற்ற விளையாட்டுகளை அழித்தது போல,  பொறியியல் கல்லூரி நடத்துபவர்களுக்கு பெருத்த இலாபத்தை பெற்றிடும் வகையில், பொறியியல் படிப்பு மீது மோகத்தை ஏற்படுத்தி எல்லாரையும் பொறியியல் படிக்கத் தூண்டியதன் விளைவு மத்திய அரசில் தமிழ்நாட்டு அதிகாரிகள் குறைந்து கொண்டே வருகின்றனர். இதன் தாக்கத்தை தமிழர்கள் உணர வேண்டும்.

                  தரம் வாய்ந்தவர்கள் தனியார் நிறுவனங்களுக்குச் சென்றுவிடு(ட்ட)வதால் அரசு நிறுவனங்கள் இலாபத்தை இழந்து, நஷ்டத்தைப் பெறுகின்றன. அரசு கல்லூரிகள், மருத்துவ மனைகள் தரம் குறைவதும் (எவருடைய நிர்பந்தம்?), தனியார் நிறுவனங்களின் (யாருடையவை?) கொழுத்த வளர்ச்சியும் ஏற்படுவது ஏன்?

                   பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன் ஐந்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ஆறாம் வகுப்பு சேர வரும் மாணவர்களுக்கும், எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு சேர வரும் மாணவர்களுக்கும் இணைப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. சில வருடங்களாக பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, ப்ளஸ் ஒன் (பதினோரம் வகுப்பு) சேர வரும் மாணவர்களுக்கும் இணைப்புப் பயிற்சி நடத்தப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இதன் உச்ச கட்டமாக, முதலாம் ஆண்டு இஞ்ஜினீரிங் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மிகக்குறைவாக இருந்ததால், சென்ற வருடத்திலிருந்து, B.E. சேரும் மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இணைப்புப் பயிற்சியும், அடிப்படைப் பயிற்சியும் சில குறிப்பிட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் நடத்தி வருகிறது. அதன் விளைவாக அண்ணா பல்கலைக் கழகக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு இஞ்ஜினீரிங் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதும், இந்த ஆண்டு எல்லா கல்லூரிகளுக்கும் இணைப்புப் பயிற்சியும், அடிப்படைப் பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளதும் வேதனைப்பட (வெட்கப்பட) வேண்டிய செய்தி!  

               பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு மட்டுமே சேர்க்கை என அறிவிக்கும் சில குறிப்பிட்ட பள்ளிகளில் தன் மகனை அல்லது மகளைச் சேர்க்கத் துடிக்கும் பெற்றோர் மனநிலையை அறிந்து அவர்களிடம் சில இலட்சங்களை வாரிச்சுருட்டி, பிராய்லர் கோழிகளை உருவாக்கும் கல்வி தந்தைகளிடமிருந்து பொது மக்களை யார் காப்பாற்றுவது? இவையெல்லாம் அரசுக்கு தெரியாமல் நடக்கிறதா என்ன? இல்லையே. இங்கு தேவைப்படுவது உயர்மட்ட குழு அறிக்கை மட்டுமல்ல, அடிமட்ட ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு வெளிப்படையான விவாதமும், வளர்ச்சிக்கான மாற்றங்களை அங்கீகரிக்கும் பெருந்தன்மையும் தான் சரியான தீர்வாக அமையும். அதற்கான வாய்ப்பை அரசு வழங்குமா? ..... 

    கனவுகளுடன்......


    நன்றி! - திரு. அரங்கநாதன். & Vidhya.

    1 comment:

    Anonymous said...

    sir mikka nandri. enpondra asiriyargalin manakkuraiyai thelivaga padam pidithu kattiulirgal. 1-8 all pass system muthalil ozhikkappada vendum. basement weak appuram eppadi building strong agum?