தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் மாநில துணைத்தலைவர் கே. அகோரம் தலைமையில் நடைபெற்றது.தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கென வெளியிடப்பட்ட அரசாணையில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும் என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக காப்பீட்டு நிறுவனமும், மருத்துவமனை நிர்வாகமும் பேக்கேஜ் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்க முடியுமெனவும், மீதித்தொகையை முன்பணமாக சிகிச்சை பெற வரும் நபர்களே செலுத்த வேண்டுமெனவும் நிர்ப்பந்தம் செய்து வருகிறது. அவ்வாறு முன்பணம் செலுத்தினால் தான் சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நவீன முறை சிகிச்சைகளை வழங்க முடியாது என மறுப்பதோடு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள பல நோய்களுக்கும் கூட சிகிச்சை அளிக்க மேற்படி மருத்துவனை நிர்வாகங்கள் மறுத்து வருகின்றன. ஏனெனில் இதற்கான தொகையினை காப்பீட்டு நிறுவனம் வழங்க மறுக்கிறது. இதுபோன்ற ஏராளமான பிரச்சனைகளை நோய்வாய்ப்பட்ட அரசு ஊழியரும் அவரது குடும்பத்தினரும் சந்திக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
எனவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியும், அரசாணைக்குப் புறம்பாக செயல்படும் காப்பீட்டு நிறுவனத்தின் மீதும், மருத்துவமனை நிர்வாகங்களின் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியும் ஜுன் மாதம் 19ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அதற்கான முறையீடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பதெனவும் இம்மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment