Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 26, 2014

    தமிழக மாணவர்கள் அகில இந்திய தேர்வுகளில் சாதிக்காதது ஏன்?தரம் குறைந்ததா சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள்?

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் பார்த்தபோது மலைத்துப் போனது, மாணவர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த கல்விச் சமுதாயமும் தான்.மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 468. அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்றவர்கள் 69,560. கணிதத்தில் நூற்றுக்கு நூறு வென்றவர்கள் 18,862. தேர்ச்சி விகிதம் 90.7; இது பெருமைப்படக் கூட விஷயம் தான்.
    எளிமையான பாடத்திட்டமும் எளிதான, நேரடியான கேள்வித்தாள்களும், அதிக மதிப்பெண் வழங்கும் விதத்தில் உள்ள விடைத்தாள் திருத்தும் முறைகளும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டுகிறது. இதில் மாணவர்களை குறை சொல்வதில் பலன் இல்லை. மாறாக எளிமையான பாடத்திட்டத்தையும், மாணவர்களின் மதிநுட்பத்தை சோதிக்காத கேள்வி முறைகளையும்தான் சொல்ல வேண்டும்.இந்த படிப்பு முறை அதிக மதிப்பெண் பெறும் இயந்திரமாக மாணவனை மாற்றுகிறதே தவிர, புதிதாக சிந்தித்து அவர்களின் தனித்திறனை மேம்படுத்த வழிகாட்டவில்லை. 'மனப்பாடம் செய்து மதிப்பெண் பெற்றால் போதும், பாடங்களில் ஆழ்ந்த அறிவு தேவை இல்லை' என்ற தமிழக பாடத்திட்ட முறைகள் மாறவேண்டியது அவசியம்.தமிழகத்தில் பள்ளி தேர்வுகளில் சாதிக்கும் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகள், போட்டி தேர்வுகள், ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில் சாதிப்பது இல்லை. ஆனால் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சராசரி மதிப்பெண் பெற்றவர் கூட, அகில இந்திய தேர்வுகளில் சாதிப்பது எப்படி? கேரளாவில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 79 சதவீதம்; தமிழகத்தில் 90.6 சதவீதம். ஆனால் அகில இந்திய தேர்வுகளில் கேரள, ஆந்திர மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்று, உயர்கல்விக்கு தேர்வாகின்றனர்.எப்படி இந்த வேறுபாடு உருவானது? எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் 'பாஸ்' என எங்கே போய்க் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கல்விமுறை? தேசிய அளவில் மாணவர்களின் திறமை, தகுதி என்கிற நீரோட்டத்தில் தமிழகம் மட்டும் பின்தங்கியிருக்கலாமா? கல்வி முறையில் மாற்றம் தேவையா? கேள்விகள் தயாரிப்பில், மதிப்பெண் வழங்குதலில் சரியான அணுகுமுறை தேவையா?அலசுகின்றனர் கல்வியாளர்கள்.

    சமச்சீர்கல்வி தரம் உயர வேண்டும் 
    ஜெயபிரகாஷ் காந்தி, கல்வி ஆலோசகர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி. ஆனால் இதே நிலை நீடித்தால் அனைவரும் 500க்கு, 500 மார்க் பெற்றாலும் ஆச்சரியமில்லை. 100 சதவீத தேர்ச்சி எளிதாக இருந்தால், திறமையான மாணவர்களை குலுக்கல் முறையில் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்; இது நல்ல அறிகுறி இல்லை. வினாத்தாள்கள் கொஞ்சம் கடுமையாக இருப்பதே நல்லது. மாணவர்கள் பொறியியல் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்விக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. 

    10ம் வகுப்பில் அறிவியல், கணித பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கியவர்கள், பிளஸ் 2வில் அதிகம் வாங்குவதில்லை. இந்த இரண்டிற்கும் இடையே ஏதோ பிரச்னை உள்ளது. இப்படியே போனால் பிளஸ் 2 தேர்வு என்பது அலட்சியமாகிவிடும். சமச்சீர் கல்வியை மத்திய அரசு பாடத்திட்டதிற்கு இணையான தரத்திற்கு உயர்த்த வேண்டும்.

    தேசியத் தேர்வுக்கு தகுதி பெறமுடியுமா? 
    சி. முத்தையா, முதல்வர், கேந்திரிய வித்யாலயா பள்ளி, மதுரை: அதிக மதிப்பெண் எடுப்பது, தரமான கல்வி மற்றும் தரமான மதிப்பீட்டை காண்பிக்கவில்லை. 500க்கு 500 மதிப்பெண் எப்படி பெறமுடியும்? கணிதத்தில் நூற்றுக்கு நூறு சரி. மொழிப் பாடங்களில் தன் புலமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலையைத்தான், நூறு சதவீத மதிப்பெண் காட்டுகிறது. சமச்சீர் பாடத்திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில், பத்தாம் வகுப்பில் தாராள மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.இதன் விளைவைப் பற்றி யாருமே சிந்திக்கவில்லை. மாணவர்கள் மத்தியில், 'சாதாரணமாக படித்தாலே போதும்' என்று மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டது, இக்கல்விமுறை. பிளஸ் 1 பாடத்தை சொல்லித் தருவதில்லை. பிளஸ் 2 பாடத்தை, இரண்டாண்டுகள் உருப்போட கற்றுத் தருகின்றனர். பொதுத் தேர்விலும் மதிப்பெண்ணை அள்ளி வழங்குகின்றனர். மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவர்களில் எத்தனை பேர், அகில இந்திய மருத்துவ, பொறியியல் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளில் தகுதி பெறுகின்றனர். ஒற்றை இலக்க சதவீதத்தில் கூட வரமாட்டார்கள். அங்கே திறமை, தகுதிக்கு தான் மதிப்பெண். வெறும் மனப்பாடத்திற்கு வரவேற்பில்லை.பிளஸ் 2வில் 200க்கு 200 'கட்ஆப்' எடுக்கும் மாணவர்கள், ஏன் முதலாண்டு பொறியியல் தேர்வில் தோற்றுப் போகின்றனர்? பொறியியல் முதலாண்டில், பிளஸ் 1 கணிதப் பாடங்கள் தான் அதிகம் உள்ளன. இங்கே பிளஸ் 1 பாடமே நடத்தப்படுவது இல்லை. பின் எப்படி மாணவர்கள் பொறியியலில் தேர்ச்சி பெறமுடியும்? சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், இவ்வளவு மதிப்பெண் பெறுவதில்லை. ஆனால் அகில இந்திய நுழைவுத் தேர்வில், வெற்றி அவர்கள் பக்கம் தான். கடந்த ஆண்டு, எங்கள் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு, மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு 'கவுன்சிலிங்'கில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் அகில இந்திய நுழைவுத் தேர்வில் எளிதாக வெற்றி பெற்று, மருத்துவப்படிப்பில் சேர்ந்தனர்.தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை. ஆங்கில மொழியை தெளிவாக பேச முடியவில்லை. இதை நாம் உணரவேண்டும்.

    ஆறாம் வகுப்பில்இருந்து மாற்றம் 
    ஆர்.சுவாமிநாதன், வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளி முதல்வர், புதுவயல்: தற்போதைய பாடத்திட்டம் நல்ல முறையில் தான் உள்ளது. மாணவர்கள் 10-ம் வகுப்பு வரை, நிறைய படிக்கிறார்கள். ஆனால், அதன் அறிவுத்திறன் மேலோட்டமாகத்தான் உள்ளது; ஆழ்ந்து இல்லை தேர்வு முறையைத்தான் மாற்ற வேண்டும். அது புத்தகம் சம்பந்தமாக மட்டுமே உள்ளது. சிந்தனை ஆற்றலை தூண்டும் வகையில் அமைய வேண்டும். மனப்பாடத்தை மாணவர்கள் நம்பும் நிலை உள்ளது. கணிதத்தை கூட, மனப்பாடம் செய்து எழுதும் நிலை.10-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் கூட, போட்டி தேர்வுகள், ஐ.ஐ.டி., பிளஸ் 1, பிளஸ் 2-வில் திணறுகின்றனர். வினாத்தாளில் ஆறாம் வகுப்பிலிருந்து மாற்றம் கொண்டு வர வேண்டும். 'அவுட் ஆப் போர்ஷனில்' பொது அறிவு திறனை வெளிக்கொணரும் வினாக்கள் இடம்பெற வேண்டும். மாணவர்கள் அதிக புத்தகங்களை படித்து அறிவை வளர்க்கும் வகையில் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

    ஒன்பது வரை எளிதாக வெற்றி 
    பி.ராஜசேகரன், முதல்வர், கே.வி.எஸ். மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, விருதுநகர்: ஒன்பதாம் வகுப்புவரை எளிதில் 'பாஸ்' செய்யும் மாணவர்கள், 10ம் வகுப்பிற்கு சென்றுவிடுகின்றனர். 10ம் வகுப்பு தேர்வுதான், முதல் அரசு பொதுத்தேர்வு என்பதால், மேல்நிலை வகுப்பிற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கிலே, அரசு சார்பில் வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது. அதன்படியே, மாணவர்களும்மதிப்பெண் அள்ளுகின்றனர். 10ம்வகுப்பை போல், பிளஸ் 1 வகுப்பு பாடங்களும் இருக்கும் என்ற நம்பிக்கையில், அலட்சியமாக படிப்பதால், அங்கு மதிப்பெண் குறைகிறது. சமச்சீர் கல்வித்திட்டம் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக உள்ளது என்பது என்கருத்து. ஆயினும் 9ம் வகுப்பிற்கு முந்தைய மதிப்பீடு தேர்வில், மாற்றத்தைக் கொண்டு வந்து, மாணவர்களை அறிவுப்பூர்வமாக யோசித்து கேள்விகளுக்கு பதிலளிக்க வைக்க வேண்டும். அதன் மூலம் மேல்நிலையிலும் போட்டி தேர்வுகளிலும், நமது மாணவர்களால் சாதிக்க முடியும். இல்லையெனில், 10ம்வகுப்பில் நன்கு மதிப்பெண் பெறுவோர் மேல்படிப்பில் திணறத்தான் செய்வர்.

    சிந்தித்து எழுத வழி இல்லை 
    எம்.சங்கரநாராயணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஓய்வு), ஸ்ரீவில்லிபுத்தூர்: தற்போதய பாடத்திட்டங்கள், மாணவர்களை சிந்தித்து எழுதுவதை குறைத்து விடுகிறது. முன்பு 'பார்முலா'க்கள் எவ்வாறு வந்தது என்பது போன்ற கேள்விகள் இருந்தன. தற்போது, கணிதத்தில் 'பார்முலா'வை மட்டும் பயன்படுத்தி, எளிதில் கணக்கை செய்து விடுகின்றனர். மாணவர்கள் படிக்கும் போதே, இன்ஜினியரிங்க், டாக்டராக வேண்டுமென்ற எண்ணத்துடனே படிக்கின்றனர். மாணவர்களுக்கு பொது அறிவுத் திறன் மிக குறைவாகவே உள்ளது. நூலகத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது. ஆராய்ந்து படிக்க வேண்டும் என்ற மனப்பான்மை குறைந்து வருகிறது. மாணவர்களுக்கு, 'செமஸ்டர்' முறையில் கல்வி கொண்டு வர வேண்டும். பாடப் புத்தகங்களின் கேள்விகளுக்கு மட்டும் விடையளிக்க பயிற்சியளிக்காமல், சிந்தித்து விடையளிக்குமாறு கேள்விகள் கேட்க வேண்டும். பாடங்கள் தொடர்புடைய வெளிஉலகு அறிவையும் கிடைக்கும் படி செய்ய வேண்டும்.

    சமச்சீர் கல்வியின் தரத்தைஉயர்த்தவேண்டும்
    எஸ்.பி.டி.கனகசபை, தாளாளர், திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளி: சமச்சீர் கல்வி பாடப்பிரிவு மிகவும் எளிமையாக உள்ளது. பத்தாம் வகுப்பு தரத்திற்கு பதிலாக, எட்டாம் வகுப்பு தரத்திற்கும் குறைவான தரத்தில்தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது மாணவர்களின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. தற்போதுள்ள பாடப்பிரிவுகளில் படித்து விட்டு, பிளஸ் 2 வகுப்பிற்கு செல்பவர்கள், அங்குள்ள பாடங்களை படிப்பதற்கு திணறுகின்றனர். சி.பி.எஸ்.இ.,படிப்புகளில் அதிகளவு பாடங்கள் போதிக்கப்படுகின்றன. இந்த அளவிற்கு சமச்சீர் பாடத்தில் அறிவுபூர்வமான சிந்தனையை தூண்டும் பாடங்கள் இல்லை. இதனால் தமிழக மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய அளவில் நடத்தப்படும் பல தேர்வுகளில் போட்டியிட முடியவில்லை. இதை தவிர்க்க சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும்.

    அதிக மதிப்பெண் மூளையை மழுங்கடிக்கும் 
    டி.குமணன், மனநலத் துறைத் தலைவர், மதுரை அரசு மருத்துவமனை: 'வாயில் ஊட்டி விடுவது போலிருக்கிறது' தமிழக கல்வி முறை. கடைசி மதிப்பெண் எடுக்கும் மாணவனும் கரைசேர வேண்டும் என்ற நோக்கத்தில் பாடத்திட்டம் இருந்தால், கல்வி உருப்படுமா? முதல் மதிப்பெண் பெறும் மாணவனின் அறிவுக்கு தீனி போட, ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டாமா? தூண்டுதல் இருந்தால் தான், மூளை வேலை செய்யும். புதிய விஷயங்களை, பாடங்களை படிக்கும் போது தான், புதிய செயல்கள் உத்வேகம் பெறும். அதன் மூலமே மாணவர்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும்.யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என நினைத்ததால் தான், சமச்சீர் கல்வி, கீழ்நிலையில் உள்ளது. கல்வி முறையில் முதலில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். வெறும் மதிப்பெண்ணை நோக்கிச் செல்லும் இயந்திர சமுதாயத்தில் இருந்து வெளியே வரவேண்டும். வெறும் மதிப்பெண் மூளையை செயல்படவிடாமல், மழுங்கடித்து விடும். இவர்களால் கல்லூரிப் பருவத்தில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்படும். மாணவர்களின் அறிவுக்கு தீனிபோடும் வகையில் கல்வி முறையில் மாற்றம் அவசியம்.

    1 comment:

    Anonymous said...

    கல்வியில் கரைவேட்டிகள் நுளைந்தால் எல்லாம் அரசியலே மாணவன் சித்தாள் வேலைக்குத்தான் 500.500மதிப்பெண் தேறும் மேல்படிப்பில் முட்டைதான்