ஸ்ரீபெரும்புதுார் ஜவன்மால் ஜுக்ராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியில், மேசை மற்றும் மர இருக்கைகள் பாதுகாக்கப்படாமல், பள்ளி கட்டடத்தின் மாடியில் குவித்து வைத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கப்பெருமாள் கோவில் நெடுஞ்சாலை சந்திப்பு அருகே, ஜவன்மால் ஜுக்ராஜ் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில், 650க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2003- 2004ம் நிதியாண்டில், நபார்டு வங்கி நிதியுதவியுடன், பள்ளி கட்டடம் கட்டப்பட்டது. பள்ளி மாணவர்களின் வசதிக்காக, மேசை மற்றும் மர இருக்கைகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை, இந்த பள்ளியில் நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, பள்ளி கட்டடத்தின் பல்வேறு பகுதியில் சீரமைக்கப்பட்டது. அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் மேசை, இருக்கைகள், பள்ளி கட்டடத்தின் மேல்தளத்தில் திறந்த வெளியில் போடப்பட்டன.
இதனால், இவை கடந்த இரு மாதங்களாக, வெயிலிலும், மழையிலும் வீணாகி, சேதமடைந்துள்ளன. அடுத்த மாதம் முதல் வாரத்தில் பள்ளி துவங்க உள்ள நிலையில், மேசை, இருக்கைகளை சீரமைத்து தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment