அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள் பட்டியலை அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தி வருவதாக, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் படி பள்ளிகள் அங்கீகாரம் குறித்த செயல்பாடுகளில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர முனைப்புடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த கல்வியாண்டில் 900 தனியார் பள்ளிகள் அதிரடியாக மூடப்பட்டது.
தற்போது மாநிலம் முழுவதும் 700 பள்ளிகள் மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச்சில் 86 பள்ளிகளுக்கு இறுதிகட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏப்ரல் இறுதி வரை, இப்பள்ளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளின் இறுதிப்பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதற்கிடையில் 12 பள்ளிகள், தானாக முன்வந்து பள்ளிகளை மூடுவதாக அறிவித்தது. மேலும் 40 பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படவுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பள்ளிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவதில் தேர்தல் தேர்வுப் பணிகள் காரணமாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு இரண்டு வார காலமே உள்ள நிலையில், அங்கீகாரம் ரத்தாகும் பெயர் பட்டியல் வெளியிடுவதில் தாமத்தை ஏற்படுத்தினால், கல்வியாண்டு துவக்கத்தில் பெற்றோர் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கநேரிடும். இதனால் பள்ளிகளின் விபரங்களை உடனடியாக வெளியிட பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். பெற்றோர் கூறுகையில், "பள்ளிகள் திறக்க இரண்டு வார காலமே உள்ளது. எந்த பள்ளியும் தானாக முன்வந்து எங்களுக்கு அங்கீகாரம் இல்லை. வேறு பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல முன்வருவதில்லை. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் கடைசி நேரத்தில் வெளியிட்டால், பெற்றோர், பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பதில் கடும் சிரமம் ஏற்படுவதுடன் தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கும். கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கும் வகையில், அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளின் விபரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்றனர். முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், "பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
No comments:
Post a Comment