3 மாநிலங்களில் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் உள்ள தலா ஒரு உறுப்பினர்களின் பதவிகளுக்கு ஜூன் மாதம் 19-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள முன்னாள் முதல்வர் முகுத் மிதியின் பதவிக்காலம் மே 26ல் நிறைவடைகிறது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி எம்.பி.யான லால்மிங்லியானாவின் பதவிக்காலம் ஜூலை 18ல் முடிவடைகிறது.
இதேபோல் கர்நாடகா ராஜ்யசபா எம்.பி.களான காங்கிரஸை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் வெளிறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா , பாஜகவைச் சேர்ந்த பிரபாகரா , எம்.ராம ஜோயிஸ் ஆகியோரின் பதவிக்காலம் ஜூன் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.
காலியாக உள்ள இந்த 6 பதவிகளுக்கும் தேர்தல் நடத்த ஜூன் 2-ந் தேதி அறிவிக்கை வெளியிடப்படும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஜூன் 9-ந் தேதி கடைசி நாளாகும். அதன்பின்னர் மறுநாள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 12-ம் தேதி கடைசி நாள். 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் அனேகமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment