பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், மாணவர்கள் மத்தியில் எழும் மன அழுத்தம் தவிர்க்க, பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் மத்தியில் தற்கொலை சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன. தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ மாணவர்கள், தற்கொலை செய்து கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. எதையும் தாங்கிக் கொள்ளாத மனப் பக்குவத்துடன் வளரும் மாணவர்களே இது போன்ற தற்கொலை முடிவை தேடிக் கொள்வதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தத்துடனே மதிப்பெண்களை எதிர்பார்த்து கொண்டிருப்பர். மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் குறித்த கனவுடன், அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் செயல்பாடுகளின் விளைவுகளே, மாணவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. மாணவர்கள் மத்தியில் காணப்படும் மன அழுத்தம், அவமானம், குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம் மற்றும் பெற்றோர்கள் மீது பயம் போன்றவற்றினால் தற்கொலை என்னும் முடிவை அறியாமையில் மேற்கொள்கின்றனர்.
வாழ்க்கையென்பது படிப்பு, மதிப்பெண், தேர்வு போன்றவற்றோடு மட்டும் முடிவதில்லை. இந்த முறை தேர்வில் தோல்வியடைவதில் அடுத்தமுறை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையை, உணர்வை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தவேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு.
உளவியல் நிபுணர் ஸ்ரீனிவாசன் கூறியதாவது: இயந்திரத்தனமான உலகில், மனம்விட்டு பேசுதல், குடும்ப கலந்துரையாடல் என்பதும் மிகவும் குறைந்துவிட்டது. பெற்றோர்கள் வேலை, பணம் என ஓடுவதுடன், குழந்தைகளையும் மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை என்று ஓட வைக்கின்றனர். இதனால், ஏற்படும் சிறு தோல்விகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் மனது பக்குவப்படாததால், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர்.
அதிக மன அழுத்தத்துடன் உள்ள குழந்தைகளை பெற்றோர் எளிதில் கண்டுகொள்ளலாம். பெற்றோர் சற்று நேரம் ஒதுக்கி தன் குழந்தைகளிடம் பேச வேண்டும். மதிப்பெண் குறைந்தாலும், தோல்வி அடைந்தாலும் நாங்கள் துணையாக இருப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் ஒப்படுவது, மதிப்பெண்களை பற்றி மட்டும் பேசிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.
தற்கொலை எண்ணம் வரும்போது மாணவர்கள் தனிமையைத் தவிர்த்து, பலர் மத்தியில் வந்துவிட வேண்டும். தற்கொலையின் விளைவுகள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்தித்தால் அவர்கள் முடிவு அவர்களுக்கே முட்டாள்தனமானதாக தெரியும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment