மெட்ரிக் பள்ளிகளுக்கு, குறைந்தபட்ச இடவசதியை இறுதி செய்ய நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குழுவில், மூன்று கல்வியாளர்களையும் சேர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, ’மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குனர் நாராயணன் தாக்கல் செய்த மனு:
அடிப்படை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், தமிழகத்தில் இயங்கும், 746 பள்ளிகளை மூட வேண்டும்; விதிமுறைகளை பின்பற்றாத இப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது; இப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இம்மனு, தலைமை நீதிபதி அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் முத்துகுமாரசாமி, ”ஒரு வகுப்பறைக்கும், அதில் படிக்கும் மாணவர்களுக்கும் தேவையான இடவசதி குறித்து அதிகாரிகள் அடங்கிய குழு அறிக்கை தயாரித்துள்ளது,” என்றார்.
இதையடுத்து, ’முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: அட்வகேட் ஜெனரல் கூறும் போது, ’இடவசதிக்கான விதிமுறைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன; கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் தான் குழுவில் உள்ளனர்’ என்றார். ஏற்கனவே, அரசுக்கு பரிந்துரைகள் அளித்த குழுவில் கல்வியாளர்கள் இருந்தனர் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, அந்த குழுவில் இடம் பெற்றிருந்த மூன்று கல்வியாளர்களை, அதிகாரிகள் குழுவிலும் சேர்க்க வேண்டும். அதன்படி, டாக்டர் சிட்டிபாபு, டாக்டர் லலிதா, டாக்டர் ராஜகோபால் ஆகியோர் சேர்க்கப்படுகின்றனர். அதிகாரிகள் குழு அளித்த பரிந்துரையை, புதிய குழு இறுதி செய்யலாம்.
மனுதாரர் கூறியபடி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் போது, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களையும் இக்குழு மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு, ’முதல் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது. விசாரணை, டிச., மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment