வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைமைச் செயலாளர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அனுப்பியுள்ள இந்த கடிதத்தில், அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்புள்ள காற்றழுத்தம், நாளை வியாழக்கிழமை (டிச.1) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று மாலை முதல் கன மழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்று மற்றும் இரண்டாம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகம், புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று புதன்கிழமை (நவ.30) மாலை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் பலத்த மழையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வசதியாக தலைமைச் செயலாளர்களுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்பி வருகிறார்கள்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல், வருகிற 2-ஆம் தேதி சென்னை-வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment