’புரிந்து படித்து, தெளிவாக எழுதினால் தேர்வில் முழு மதிப்பெண்களை பெறலாம்,’ என பொள்ளாச்சியில் நடந்த ’தினமலர் ஜெயித்துக்காட்டுவோம்’ நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர் களுக்கு ’டிப்ஸ்’ வழங்கினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தமிழ்வழி மாணவர்களுக்கான ’தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது.
இதில், பி.எஸ்.ஜி., சர்வஜனா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய ’டிப்ஸ்’:
பிழையின்றி எழுதுங்க...
பங்கஜம், தமிழ்
ஒரு மதிப்பெண் வினா, குறுவினா, மனப்பாட பகுதி, பத்திவினா விடை ஆகியவற்றிலிருந்து குறைந்தது 40 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். இதனை நன்றாக படிக்க வேண்டும். பிழையின்றி, அடித்தல், திருத்தமின்றி எழுதவும்.
இரண்டு மணி நேரத்துக்குள் தேர்வெழுதிவிட்டு அரைமணி நேரம் எழுதிய விடையை சரிபார்க்க வேண்டும். இரண்டாம் தாளில், அணி அலகிடுதல், துணைப்பாடம், படிவம் நிரப்புதல், கடிதம், கட்டுரை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தமிழில், 100 மதிப்பெண்கள் எடுப்பது எளிதாகும்.
ஆங்கிலம் எளிது
மெஹர்நிஸா, ஆங்கிலம்
இலக்கணம் சார்ந்த வினாக்களுக்கு சரியான விடையினை எழுத வேண்டும். இலக்கணப்பிழையின்றி எழுத வேண்டும். செய்யுள், உரைநடைப்பகுதியிலிருந்து, 50 மதிப்பெண் வினாக்கள் வரும்.
செய்யுள், உரைநடை பாராகிராப் வினாக்கள், 1,2,3,4 அல்லது 4,5,6,7 ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படும். அதனை நன்றாக படித்துக்கொள்ள வேண்டும்.
மனப்பாட செய்யுள் நான்கில், மூன்றினை நன்றாக படித்துக்கொள்ள வேண்டும். தினசரி மனப்பாட பகுதியை எழுதிப்பார்க்க வேண்டும்.
இரண்டாம் தாள் வினாக்களுக்கு விடை எளிதாக எழுதுவதற்கு ஏற்ற வகையில், தினசரி ஒரு துணைப்பாடத்தினை முழுமையாக படித்தால், ஏழு நாட்களில், ஏழு பாடங்களையும் படித்து விடலாம். இவ்வாறு படித்தால், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிதாக விடையளிக்கலாம்.
டயலாக், கடிதம் எழுதுதல் ஆகியவற்றை எழுதிப்பார்த்தல் அவசியமாகும். துணைப்பாடத்திலும், 1,2,3,4 அல்லது 4,5,6,7 ஆகிய பாடங்களை நன்றாக படிக்க வேண்டும். ஆங்கிலம் மிக எளிதானது; முழு மதிப்பெண் எளிதாக பெற முடியும்.
பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி சசிகலா, கணிதம் கணக்கு பாடத்தில் எளிதாக, 100 மார்க் வாங்க முடியும். பயிற்சியும், முயற்சியும் இருந்தால், கணித பாடத்தில் சாதிக்கலாம். புளூப்ரிண்ட் படி பாடம் தேர்வு செய்து படிக்கலாம்.
கணக்குகளை திருப்பித்திருப்பி போட்டுப்பார்க்க வேண்டும். 2,3,5,8 ஆகிய பாடங்களிலிருந்து கட்டாய வினாக்கள் கேட்கப்படும்.
எனவே, இந்த பாடங்களை நன்றாக பயிற்சி செய்து கொள்ள வேண்டும். ஆழமாக உணர்ந்து படித்தால், தேர்வெழுதும் போது எளிதாக வினாக்களுக்கு விடையளிக்கலாம். ஒவ்வொரு நாளும் கணிதத்தை போட்டு பார்க்க வேண்டும்.
பார்முலா எழுதி பார்த்து நினைவில் வைத்துக்கொள்ளணும். விடைகள் கட்டாயமாக எடுத்து எழுத வேண்டும்.
செய்முறை வடிவியல், வரைபடம் வினாக்களுக்கு வகுப்புகளில், ஆசிரியர்கள் கூறுவதை போல எழுத வேண்டும்.
இயற்கணிதம் காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் சுருக்குக ஆகிய பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும். முக்கோணத்தில் பரப்பு, நாற்கரத்தின் பரப்பு ஆகியவற்றிலிருந்து ஒரு ஐந்து மதிப்பெண் வினா கேட்கப்படும்.
வடிவியலில், எல்லா கணக்குகளையும் எழுதிப்பார்க்க முடியாத மாணவர்கள், வட்டத்திற்குள் உள்ளே, வெளியே, நான் வெட்டுதல் மற்றும் தேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.
முழுமையாக படிக்க வேண்டும் மீனலோசனி, அறிவியல் பாடத்தினை நன்றாக புரிந்து படிக்க வேண்டும். ஆழ்ந்து படித்தால், 100 மார்க் பெற முடியும். பயிற்சி வினாக்களை நன்றாக படிக்க வேண்டும். பாடங்களை முழுமையாக படிக்கும் போது, பாடத்திலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு எளிதாக விடையளிக்கலாம்.
புளூப்ரிண்ட் படி பார்த்தால், எல்லா பாடத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வில், 119 வினாக்கள் கேட்கப்படும்; 75 மார்க்கிற்கு 39 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். நிதானமாக வினாக்களை நன்றாக படித்து பார்த்து விடையளிக்க வேண்டும்.
உயிரியலில், 3,4 பாடங்களிலிருந்து படங்கள் கேட்கலாம். அவற்றை தெளிவுடன் வரைந்து பாகங்களை குறித்தால், முழு மதிப்பெண் பெறலாம்.
வேதியியலில், 14,16 ஆகிய பாடங்களிலிருந்து ஐந்து மதிப்பெண் வினாக்கள் வரும். பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
இயற்பியலில், இரண்டு பாடங்களை படித்தால், 20 மதிப்பெண் தயாராகி விடுவோம். 15,17 ஆகிய பாடங்களிலிருந்து ஐந்து மதிப்பெண் கேட்கப்படும். வினாக்கள் தரம் பிரித்து, கேள்வி வகை அறிந்து விடையளிக்க வேண்டும்.
அட்டவணை வினாக்களுக்கு அட்டவணையாக எழுத வேண்டும். வரிசை மாறாமல் எழுத வேண்டும். சூத்திரம், அலகு சரியாக எழுத வேண்டும்.
நேர மேலாண்மை அவசியம் மஞ்சுளா, சமூக அறிவியல் வரைபட பயிற்சி, காலக்கோடு ஆகியவற்றை நன்றாக பயிற்சி செய்ய வேண்டும். வினா எண் வரிசையாக எழுதி விடையளிக்க வேண்டும்.
இரண்டு மதிப்பெண் தலைப்பிட்டு எழுதணும். வேறுபடுத்துக கட்டாயம் எழுத வேண்டும்.
அட்டவணையிட்டு குறைந்தபட்ச இரண்டு வேறுபாடுகள் குறிப்பிட வேண்டும். பெருவினாக்கள் எழுதும் போது, உட்தலைப்பிட்டு பத்தி, பத்தியாக எழுத வேண்டும்.
முக்கிய ஆண்டுகள், நிகழ்வுகள் அடிக்கோடிட்டு எழுதலாம். பெருவினாக்கள் தேர்வு செய்யும் போது நன்கு தெரிந்த வினா தேர்வு செய்து, பாயின்டாக எழுதலாம்.
நேர மேலாண்மை வகுத்துக்கொண்டு விடையளிக்க வேண்டும். காலக்கோடு, ஐந்து நிகழ்வுகள், ஆண்டுகள் குறிப்பிடப்பட வேண்டும். ஆண்டுகள் இடது பக்கமும், நிகழ்வுகள் வலது பக்கமும் எழுத வேண்டும். வரைபட பயிற்சி வினாக்கள் எண் முக்கியமாக போட வேண்டும்.
வரலாறு வரைபடத்தில், ஆசியா மேப்பினை தேர்வு செய்யலாம். முக்கியமான நகரம் மட்டும் புள்ளி வைக்க வேண்டும். நாடுகளுக்கு புள்ளி வைக்கத்தேவையில்லை. புவியியலில், சிகரங்கள், மலைத்தொடர்கள், முக்கிய நகரம் இவற்றை எழுத அதிக பயிற்சி வேண்டும்.
மேப்பில், திசைகள் வரைந்து குறிப்பு எழுத வேண்டும். சமூக அறிவியலில் எளிதாக மதிப்பெண் பெற முடியும்.
No comments:
Post a Comment