’பார்வை குறைந்த பள்ளி மாணவன், தனக்கு பள்ளி மாதிரித் தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நேரத்தை அதிகரிக்க வேண்டும்’ என, திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் மனு அளித்தார். பழநி பச்சலநாயக்கன்பட்டியை சேர்ந்த அம்மாபட்டி மகன் அப்பாத்துரை, 18. அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன். இவருக்கு கடந்த ஓராண்டாக பார்வை குறைபாடு உள்ளது.
இதனால், ’எதிர்வரும் 10வகுப்பு பொதுத்தேர்வில் அதிக நேரம் பங்கேற்க தனக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். மேலும் பள்ளியில் நடக்கும் மாதிரி தேர்வு நடைபெறும் நேரங்களையும் அதிகரித்து அனுமதி வழங்க வேண்டும்’ என, தனது தந்தை அம்மாபட்டியுடன் திண்டுக்கல் கலெக்டர் வினயிடம் மனு அளித்தார்.
டாக்டர்கள் பரிந்துரை: மாணவன் அப்பாத்துரையின் கண்களை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் கிம்போ மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்த் தலைமையிலான குழுவினர் சோதித்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளை பரிந்துரைத்துள்ளனர்.
அதில், ’மாணவன் அப்பாத்துரைக்கு பார்வைத் திறனில் குறைபாடு உள்ளது. அதனால் பாட புத்தகத்தை உற்று நோக்கித்தான் படிக்க முடியும். வகுப்பில் அவரை முதல் வரிசையில் அமர வைப்பது அவசியம். மேலும் கரும்பலகையில் இருந்து மாணவன் அதிக துாரத்தில் உட்காராதவாறு பார்த்துக் கொள்வதும் அவசியம்.
மேலும் முக்கிய தேர்வுகளில் கூடுதல் நேரம் வழங்க வேண்டும். புத்தகம் வாசிக்கும் நேரத்தையும் மிகக்குறைந்த அளவே மாணவனுக்கு வழங்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கலெக்டர் வினய் கூறியதாவது:
மாணவன் அப்பாத்துரையின் மருத்துவ பரிந்துரையை பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன். இயக்குனரகம் ஒப்புதலின் பேரில் தேர்வு நேரத்தை அதிகரித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதற்கான ஒப்புதல் கடிதம் விரைவில் மாணவன் அப்பாத்துரைக்கு வழங்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment