மேல்நிலை வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தும் பயிற்சித்தாள் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வந்து, நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற, எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அறிய, எட்டாம் வகுப்பு வரை, பயிற்சித்தாள் கொண்டு, தினசரி தேர்வு நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது. இத்தேர்வு, இம்மாதம் 15ம் தேதியில் இருந்து, பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், தலைமையாசிரியர் இ-மெயில் முகவரிக்கு, அனைத்து வகுப்புகளுக்குமான, மூன்று வார கால, பயிற்சித்தாள் வினாக்கள் அனுப்பப்பட்டன.
ஆனால், தேர்வை கரும்பலகையில் எழுதிப்போட்டு நடத்த, மாநில கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டது. இதில், படங்கள், வண்ணங்கள் குறித்த கேள்விகள் இருப்பதால், வேறுபடுத்தி காட்டுவதில் சிக்கல் இருப்பதாக, ஆசிரியர்கள் புலம்பினர். இந்நிலையில், பயிற்சித்தாள் தேர்வு, ஒன்பது, பத்தாம் வகுப்புக்கும், விரைவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 வகுப்பு வரை, தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பயிற்சித்தாள் வினாக்கள், போட்டித்தேர்வு போல், அப்ஜெக்டிவ் மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் சிந்திக்கும் திறன் மேம்படும்.
ஆனால், தேர்வை தினசரி கரும்பலகையில் எழுதி போட்டு நடத்துவது இயலாத காரியமாக உள்ளது. வினாத்தாள் மூலம், வாரத்தேர்வாக நடத்தினால், பலனுள்ளதாக இருக்கும்.
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு, செய்முறை, கருத்துரு பகுதிகளை முழுமையாக முடிக்கவே நேரமில்லாமல்; மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. எனவே, நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு, சில மாற்றங்களுடன் பயிற்சித்தாள் தேர்வு நடத்த, கல்வித்துறை முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment