கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்கு கேட்கப்படும், அதற்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அபராதத்துடன் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இதற்கு ஏற்றார்போல் வருமான வரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட திருத்த மசோதவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில்கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 30 சதவீத வரியும், அபராதமாக 10 சதவீதமும், வரிக்கு கூடுதல் வரியாக 33 சதவீதம் அதாவது 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் கூடுதல் வரியாக பிடிக்கப்படும் தொகை, ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதிக்காக ஒதுக்கப்படும்.
முன்னதாக, கருப்பு பணத்தை தாங்களாக தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, கருப்பு பணத்தை தெரிவித்தவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி, கருப்பு பணத்தை மறைத்து வருமான வரி சோதனையில் சிக்கினால் 85 சதவீத வரி விதிக்கப்படும் என சட்ட திருத்தத்தில் முக்கிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை சிக்கினால், அந்த தொகைக்கு 60 சதவீத வரியும், கூடுதல் கட்டணமாக வரியில் 25 சதவீதம், அதாவது 15 சதவீதம் வரியும் விதிக்கப்படும்.
இதுதவிர, 10 சதவீத அபாரதத்தை சம்மந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரியை குறைப்பதற்காக வருமானத்தை குறைத்து காட்டியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மொத்தமாக வருமானத்தை மறைத்திருந்தால், 200 சதவீத வரி விதிக்கப்படும் என சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, கணக்கில் கட்டாத பணத்தில் 25 சதவீதத்தை வறுமை ஒழிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. மேலும், 4 ஆண்டுகளுக்கு டெபாசிட் பணத்தை எடுக்கவும் முடியாது. இந்த பணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘வருவாய் ஆதாரம் கேட்க மாட்டோம்’
வருமான வரி சட்ட திருத்த மசோதா குறித்து வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில், ‘கருப்பு பண பதுக்கலை தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு எந்த வருவாய் ஆதாரமும் கேட்கப்படாது. மேலும், சொத்து, சிவில் வரி உள்ளிட்ட வரி ஆதாயங்கள் பெறலாம். அதே நேரத்தில், அந்நிய செலாவணி சட்டம், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம், கருப்பு பணம் தடுப்பு சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது. நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு கரிப் கல்யாண் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் கணக்கில் கொள்ளப்படும். இதற்கான கடைசி தேதி, மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். தோராயமாக இது டிசம்பர் 30ம் தேதியாக இருக்கலாம்’ என்றார்.
No comments:
Post a Comment