பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வேலை வாய்ப்பிற்கான தேர்வில், அனைத்து பொறியியல் கல்லுாரிகளின் மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. கரூர் பாப்பான்காடு ஜவஹர்லால் நேரு தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் 500 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்க அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கிறது.
இந்நிறுவனங்கள் சில கல்லுாரிகளில் மட்டுமே வேலைவாய்ப்பிற்கான வளாக தேர்வை நடத்துகின்றன. இதனால், சில மாணவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
தகுதி இருந்தும் சில மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல், சாதாரண வேலைக்குச் சென்று, குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர்.பன்னாட்டு மற்றும் பெரிய நிறுவனங்கள் நடத்தும் வேலைவாய்ப்பிற்கான தேர்வில், அனைத்து பொறியியல் கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜவஹர்லால் நேரு மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் கொண்ட அமர்வு,’ இம்மனு நிலைக்கத்தக்கது தானா? என்பதை முடிவு செய்ய விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது,’என உத்தரவிட்டது.
No comments:
Post a Comment