கறுப்புப் பணத்தை ஒழிக்க, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் நரேந்திரமோடி.. முன்னெச்சரிக்கை இல்லாமல் பிரதமர் இவ்வாறு திடீர் அறிவிப்பு செய்வாரா, நிச்சயம் மக்கள் அனைவருக்கும் புதிய பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால். தற்போது மக்கள், பிரதமர் மீது முழுமையாக நம்பிக்கை இழந்துவிட்டனர். காரணம், மோடி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து 11 நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால், மக்கள் கையில் முழுமையாக மாற்றுப் பணம் இல்லை. வங்கியிலும் இல்லை. அனைவரும் அன்றாட செலவுக்குப் பணம் இல்லாமல் பலகொடுமைகளை அனுபவித்துவருகிறார்கள்.
கையில் உள்ள பணம், செல்லாத பணம் என்ற நிலையில் மணமக்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யபட்டு, தேதியை தள்ளிவைத்துவிட்டார்கள். இதை பலர் அபசகுணமாக நினைத்து மோடியை சபித்து, கடும் அதிருப்தியாக பேசிவருவதையும் வெளிப்படையாகக் காணமுடிகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் சுமார் 47 லட்சம் பேரும், பென்ஷன் வாங்குபவர்கள் 53 லட்சம் பேரும், குறிப்பாக தமிழகத்தில் சுமார் 11 லட்சம் அரசு ஊழியர்களும், 4½ லட்சம் பென்ஷன்தாரர்களும் உள்ளனர். இந்தியா முழுக்க மத்திய, மாநில அரசு ஊழியர்கள் 1¼ கோடிபேர் இருப்பார்கள். இவர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி சம்பளம் கிடைக்குமா என்ற அச்சமும், சந்தேகமும் உருவாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் கடந்த 17ஆம் தேதி தலைமை செயலாளர், நிதி செயலாளர் உள்ளிட்டோர் முதல்வர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்தமாதம் ஊதியத்தை பணமாகக் கையில் கொடுங்கள் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். மேலும், தனியார் நிறுவனங்களின் தொழிலாளர்களும், அலுவலர்களும் இந்த மாத சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் பணமாகக் கையிலேயே கொடுத்தால் பயன்பாடாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
’’அன்றாடம் கட்டட வேலைக்குப் போகும் தொழிலாளர்களுக்கு செல்லாத பணத்தைத்தான் இன்றுவரையில் கூலியாகக் கொடுத்துவருகிறார்கள். அதை வாங்கிக்கொண்டு மாற்றமுடியாமையால் பேருந்துக்கு செல்ல சில்லறை இன்றி கண்ணீரோடு நடைபயணமாகப் போவது கொடுமையாக இருக்கிறது. இங்கே நடப்பது சர்வாதிகார ஆட்சியா அல்லது மக்கள் ஆட்சியா” என்கிறார் மீன் வியாபாரியான சினேகலதா.
No comments:
Post a Comment