மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டம் அடுத்த கல்வி (2017-2018) ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
புதிய பாடத்திட்டம்
புதிய பாடத்திட்டம் மாற்றம் குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
4 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது உண்டு. அதன்படி அண்ணாபல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல்கல்லூரிகள், அரசு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன.
எனவே புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் அந்தந்த பாட நிபுணர்கள உள்ளனர். இதற்காக அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாட வாரியாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
வேலை வாய்ப்பு அளிக்கும்
பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் 900 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள பாடத்துடன், புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகளுக்கு தேவையானவை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்ட பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த புதிய பாடத்திட்டம் தரமாக இருக்கும்.
பி.இ. படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளும் மாற்றப்படுவதற்கான வேலை நடந்து வருகிறது. பி.இ. என்ற இளநிலை பட்டப்படிப்புக்கு 41 தலைப்புகளிலும், எம்.இ. என்ற முதுநிலை பட்டப்படிப்புக்கு 57 தலைப்புகளும் வர உள்ளது. இந்த படிப்பு மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்கும் கல்வியாக இருக்கும்.
விரும்புவதை எடுத்து படிக்கும் மாணவர்கள்
உதாரணமாக மாணவர்கள் மெக்கானிக்கல் படித்தால் அவர்கள் விரும்பினால் சிவில் பாடத்தின் ஒரு பகுதியையும் எடுத்து படிக்கலாம். இந்த முறை புதிய பாடத்திட்டத்துடன் சேர்ந்து அமல்படுத்தப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் 2017-2018-ம் ஆண்டு அமல்படுத்தப்படும். அதாவது அந்த (2017-2018) வருடம் பி.இ. சேரும் மாணவர்களுக்கு கொண்டுவரப்படுகிறது.
இந்த புதிய பாடத்திட்டம் சிண்டிகேட், செனட் அனுமதி பெற்று அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment