திருத்தணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல், ஆங்கிலம், உடற்பயிற்சி ஆகிய பாடங்களுக்கு ஒரு ஆசிரியர் கூட இல்லாததால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், ஆண்டுக்கு ஆண்டு சேர்க்கையும் குறைந்து வருகிறது. திருத்தணி, காந்தி ரோட்டில், டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, நடப்பாண்டில், 1,230 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு மொத்தம், 67 ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது, 54 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
மேல்நிலைப் பாடப்பிரிவில், போதிய ஆசிரியர்கள் இல்லை. உதாரணமாக, மூன்று ஆங்கில ஆசிரியர் பணியிடங்களில் ஒருவர் கூட இல்லை. அதே போல் வேதியியல் பாடத்திற்கு, ஆசிரியர் இல்லை (ஒரு பணியிடம்).
இதுதவிர, உடற்கல்வி இயக்குனர் ஒருவர், மூன்று உடற்கல்வி ஆசிரியர்கள் என, மொத்தம் நான்கு பணியிடங்களில், ஒருவர் கூட தற்போது இல்லை.
இங்கு பணிபுரிந்து வந்த சில ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பணி ஓய்வு என, இப்பள்ளியில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால், அரசு பொதுத்தேர்வில், தேர்ச்சி குறைவதுடன், பல பெற்றோர், தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
மேலும், இப்பள்ளியில் ஒரு இரவு காவலர், இரண்டு அலுவலக உதவியாளர்கள், இரண்டு பதிவறை எழுத்தர் போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பாற்றாக்குறையால், ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை, இதே பள்ளியில், 2,000 மாணவர்களுக்கு குறையாமல் படித்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆசிரியர்கள் இப்பள்ளியில் வேலை செய்ய பிடிக்காமல், வேறு பள்ளிகளுக்கு பணி மாற்றம் செய்தும் சென்று உள்ளனர்.
No comments:
Post a Comment