அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ’வாட்ஸ் ஆப்’ செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு ’வாட்ஸ் ஆப்’ நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் ’வாட்ஸ் ஆப்’ செயலி உருவாக்கப்பட்டது.
ஜான், பிரைன் இருபதாண்டுகளாக 2007 செப்., வரை யாஹூ நிறுவனத்தில் கணினி சார்ந்த வேலைகளைச் செய்தனர். பின் ’பேஸ்புக்’ நிறுவனத்தில் வேலையில் சேர முயற்சித்தனர். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
மனம் தளராத இருவரும், வரும் காலங்களில் மக்கள் ’ஸ்மார்ட் போன்’ உபயோகிப்பர் என கணித்து, ’வாட்ஸ் ஆப்’ செயலியை உருவாக்கியது தான் இன்றைய அவர்களின் இமாலய வெற்றிக்குக் காரணம்.
’வாட்ஸ் ஆப்’ நிறுவனர்களான ஜான் மற்றும் பிரைன் ஆகியோரை வேலைக்கு எடுக்காத ’பேஸ்புக்’ நிறுவனம், ஏழு ஆண்டுகளுக்குப் பின்பு 2014 பிப்., 19 ’வாட்ஸ் ஆப்’ நிறுவனத்தைத் 1600 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
மைனர்களுக்கு தடை
’வாட்ஸ் ஆப்’ பயன்படுத்துபவர்கள், தங்கள் சொந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டும். பதினாறு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அதைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவது தெரிந்தால் உடனடியாக ’வாட்ஸ் ஆப்’ குழுவிலிருந்து நீக்கப் படுவர் என்பதை ’வாட்ஸ் ஆப்’ நிறுவனம் விதிமுறையாக குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறை எவ்வளவுதுாரம் காப்பாற்றப்பட்டுள்ளது என தெரியவில்லை.
80 கோடி பேர்
உலகில் 80 கோடி நுகர்வோர் ’வாட்ஸ் ஆப்’ செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். மாதம் லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் உருவாகின்றனர். ’வாட்ஸ்ஆப்’ பயன்படுத்துபவர்களில் உலகில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
’ஸ்மார்ட் போனுடன் ’வாட்ஸ் ஆப்’ வைத்திருப்போரை, இன்றைய நாகரிகக் குறியீடாக உருவாக்கி, அவர்களைத் தங்கள் மாய வலைக்குள் சிக்கவைக்கும் வேலையைப் பன்னாட்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய மாணவர்கள், ’வாட்ஸ் ஆப்’க்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்திக்கும் நேரத்தையும் கல்வி கற்கும் நேரத்தையும் இழக்க நேரிடுகிறது. இதைப் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்கள் உணர்ந்து, அதைப் பயன்படுத்த முறையாக வரையறை செய்ய வேண்டும்.
அரட்டைக்காக பயன்படும் அவலம்
’ஸ்மார்ட் போனுடன் வாட்ஸ் ஆப் பயன்படுத்தக் கூடிய மாணவர்களிடம், அவர்கள் கல்வி முறையில் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமைகளை அறிய, தென்மாவட்ட தகவல் தொழில் நுட்ப இளைஞர்களை ஒருங்கிணைத்து வரும் ’மதுரை ஐடியன்ஸ்’ அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்ட பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளிடம் ஆய்வு நடந்தது. அவர்களிடம் கலந்துரையாடல், அலைபேசி, மின்னஞ்சல், முகநுால், மற்றும் டுவிட்டர் வழியாகக் கேள்விகளை கேட்ட போது கல்வி, பொதுத் தகவல், அரட்டை, குடும்பம் போன்ற நான்கு நியாயமான காரணங்களுக்காக இதைப் பயன்படுத்துவதாகப் பெரும்பாலோர் தெரிவித்தனர்.
அவர்களிடம் பெற்ற தகவல்களைப் பகுப்பாய்வு செய்ததில், மாணவர்கள் அரட்டைக்காகவும், பொதுத் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், “வாட்ஸ்ஆப்”’ பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.
மாணவிகள் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த தகவல்களை நண்பர்களிடம் தெரிவிக்கவும் அரட்டைக்காகவும் பயன் படுத்துவதாகத் தெரிவித்தனர்.
கல்விக்கான பயன்பாடு குறைவு
மிக குறைந்த எண்ணிக்கையினரே கல்விக்காக பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்த்த போது அதிர்ச்சியாக இருந்தது.கல்விக்காக -8, பொதுத் தகவலுக்காக -11, அரட்டைக்காக -72, குடும்பத்திற்காக -9 சதவீதம் பயன்படுத்தியுள்ளனர். ’வாட்ஸ் ஆப்’ பயன்படுத்தியவர்கள் 72 சதவீதம் பேர் நடந்து முடிந்த தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுத்ததையும் ஒப்புக்கொண்டனர்.
நுாறு பேர் கொண்ட குழுவாக இருப்பதால், அரட்டையடிப்பதிலேயே மிக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், அதனால் கல்வியில் அதிகக் கவனம் செலுத்த நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதைப் பார்க்கும் போது வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும், வலிமை இழந்து போய்க் கொண்டிருக்கும் மாணவ மாணவியரின் பொன்னான நேரம் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் ஏற்படுத்தித் தர வேண்டியது
அவசியம் என்பது தெரிகிறது. ’வாட்ஸ்ஆப்’ செயலியில் மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் மிகச் சுருக்கமாகவும், வேகமாகவும் எழுதிப் பழகுவதால் மொழிப் பயன்பாட்டில் நிறைய குழப்பங்களும் இலக்கணப் பிழைகளும் ஏற்படுகின்றன. இது தேர்வுகளிலும் அவர்களை அறியாமல், எழுத்துப் பிழை ஏற்படுத்த வைப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
பாதிக்கப்படும் கல்வியின் தரம்
’வாட்ஸ் ஆப்’ பயன்படுத்துவதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, ஆம் என 76, பாதிப்பு இல்லை என 24 சதவீதத்தினரும் பதில் அளித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி மட்டும் பாதிக்கப்படாமல், ஒருவர் பொழுதுபோக்காகக் காணொலி, கேட்பொலி ஆகியவற்றை ’வாட்ஸ்ஆப்’ பில் தடையின்றி அனுப்புவதால் அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் அவை செல்கின்றன.
அவற்றை விருப்பம் இல்லாமலும் பார்க்க வேண்டிய சூழல் அக்குழுவிலுள்ள அனைவருக்கும் ஏற்படுகிறது. ஒருவகையில் அதுவே அவர்களின் நேரத்தைச் சூறையாடத் தொடங்குகிறது.
’வாட்ஸ் ஆப்’ போதை
உண்மையான தேவைக்குப் பயன்படவேண்டிய மின்சாரம் மற்றும் இணைய சேவையும் திசைமாறி வீணாகிறது என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இதுவே தொடர்ந்து, கணவன் மனைவியாகிற நிலையில், அவர்களுக்குள் பேசி பகிர்ந்து கொள்ளுதல் என்ற பரஸ்பர உறவு நிலை மாறி ’வாட்ஸ்ஆப்’ மூலம் பகிர்ந்து கொள்ளுதல் என்கிற நிலை மேலோங்கி, அவர்களின் நெருங்கிய உறவிற்கு தடையாகவும் அமைந்து விடும்.
’டிவி’ மூலம் கால் நூற்றாண்டு களாக மாணவர் கிரிக்கெட் நோய்க்கு ஆட்கொள்ளப்பட்டார்களோ, அதைப்போல ’ஸ்மார்ட்போன்’ உதவியுடன் ’வாட்ஸ்ஆப்’ என்ற நோயால் இப்போது உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு வரு கின்றனர் என ஆய்வு முடிவு மூலம் அறிய முடிந்தது.
எனவே இளம் தலைமுறையினர் வாழ்வை செம்மைப்படுத்தும் விதம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எல்லா நல்லதற்குள்ளும் கெட்டதும் இருக்கிறது. எல்லாக் கெட்டதற்குள்ளும் நல்லதும் இருக்கிறது என்பது ’வாட்ஸ் ஆப்’ செயல்பாடு தெரியப்படுத்துகிறது.-பெரி.கபிலன் கணினி அறிவியல் பேராசிரியர்மதுரை. 98944 06111.
No comments:
Post a Comment