கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும், என, கலெக்டர் கதிரவன் எச்சரித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 1077 மற்றும் போலீஸ்துறையில், 100 ஆகிய கட்டணம் இல்லாத தொலைபேசிகள் உள்ளன.
ராகிங் புகார் தெரிவிப்பவர்களின் தொலைபேசி எண் மற்றும் பெயர் ரகசியமாக பாதுகாக்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலும் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி வைக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களிலும், கேலி செய்வதை தடுக்கும் வகையில் குழு அமைக்க வேண்டும். முதலாண்டு மாணவர்களுக்கு தனியாக விடுதிகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
கல்லூரியில் சேரும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கும் போது, முதலாம் ஆண்டு மாணவர்கள் என தனியாக தெரியும் வகையில், தனி நிறத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் கல்லூரியில் சேரும் போது, உறுதிமொழி படிவத்தில், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம், தன் மகன் மற்றும் மகள், பிறரை கேலி செய்ய மாட்டார்கள் என எழுதி கையெழுத்து வாங்க வேண்டும்.
கல்லூரி விடுதிகளில் கேலி செய்வதை தடுக்கும் வகையில் அமைக்கப்படும் குழுவில், மாணவ பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். கல்லூரி விடுதிக்கு தனியாக ஒரு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
கல்லூரிகளில் மாணவர்களை கேலி செய்யும் பட்சத்தில், பாதிக்கப்பட்ட மாணவரோ அல்லது அவரது பெற்றோரோ போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யலாம். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment